'டிஜிட்டல்' கைது மோசடியில் ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்
'டிஜிட்டல்' கைது மோசடியில் ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்
ADDED : அக் 17, 2025 12:31 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம், 'டிஜிட்டல்' கைது மோசடி வாயிலாக, 58 கோடி ரூபாய் பறித்த மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
'சைபர் க்ரைம்' மோசடியின் ஒரு பகுதியாக டிஜிட்டல் கைது மோசடி நாடு முழுதும் நடந்து வருகிறது.
'வாட்ஸாப் வீடியோ' மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த மோசடியில் ஏமாறாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எச்சரித்து வருகின்றன.
இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 78 வயது தொழிலதிபரின் மொபைல் போனுக்கு ஆக., 19ல் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர்கள், தாங்கள் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினர்.
பணமோசடி புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி, தொழிலதிபரையும், அவர் மனைவியையும், 'வாட்ஸாப் வீடியோ' அழைப்பில் வரவழைத்து விசாரிப்பது போல் மிரட்டினர்.
பிரச்னையில் சிக்காமல் இருக்க, ஜாமின் தொகை கட்டச் சொல்லி வற்புறுத்திய நபர்கள், ஆக., 19 முதல் அக்., 8 வரை இருவரையும் டிஜிட்டல் கைது செய்தனர்.
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 58 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய வைத்தனர்.
வங்கி கணக்கு ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப் படுவதை உணர்ந்த தொழிலதிபர், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில், தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து, 18க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கு, 58 கோடி ரூபாய் மாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கணக்குகளும் முடக்கப்பட்டன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், புறநகர் பகுதியான மலாடைச் சேர்ந்த அப்துல் குள்ளி, 47, மத்திய மும்பையைச் சேர்ந்த அர்ஜுன் கட்வசாரா, 55, அவரது சகோதரர் ஜெதாராம், 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது விவகாரத்தில், தனி நபர் ஒருவரிடம், 58 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது, இதுவே முதன்முறை என போலீசார் தெரிவித்தனர்.