இந்தியா வந்தார் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்
இந்தியா வந்தார் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்
UPDATED : அக் 13, 2025 12:01 AM
ADDED : அக் 12, 2025 10:11 PM

புதுடில்லி: அரசுமுறைப் பயணமாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று இந்தியா வந்தார்.
விமானம் மூலம் டில்லி வந்த அவரை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேரில் சென்று வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். அப்போது வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும், இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, மும்பையில் கனடா மற்றும் இந்திய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
கனடா அமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், 'இந்த பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான வளர்ச்சி மேலும் முன்னெடுக்கப்படும்,' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பயணத்திற்குப் பிறகு கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்குச் செல்ல இருக்கிறார்.