அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்
அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்
ADDED : நவ 03, 2025 07:31 AM

ஒட்டாவா: 'அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,' என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், கனடா உலகின் பிற நாடுகளுடனான புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; உலகின் பிற நாடுகளுடன் புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலகப் பொருளாதாரத்தில் 60 சதவீதப் பங்களிப்பை வழங்கும், வேகமாக வளர்ந்து வரும் ஆசிய பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதை விட, சிறந்த இடம் வேறு இல்லை.
இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, சீனாவுடனான உறவில் நிகழ்ந்த திருப்புமுனை ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.
இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். நான் பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.
அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என தெரியும். ஆனால் நாங்கள் மிக விரைவாக முன்னேறி வருகிறோம், என்று அவர் கூறினார்.

