பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
ADDED : செப் 07, 2025 02:24 PM

சென்னை: பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் குடும்பத்தினரை சந்தித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுதற்போது பிரிட்டனில் அவர் உள்ளார்.
இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பென்னி குயிக் வரலாறு
தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். ஆங்கிலேய பொறியாளரான இவர், லண்டனில் இருந்து 1890களில் இந்தியா வந்தார். மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
தென் தமிழகத்தின் வைகை பாசனத்தை நம்பியிருக்கும் மக்கள் மழை பொய்த்து பஞ்சத்தில் தவிப்பதை கண்டு மனம் வருந்தி, முல்லை பெரியாறு அணைக்கான திட்டத்தை உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளை விற்று அணையை கட்டி முடித்தார். இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணி மண்டபம் கட்டி தென் தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஜான் பென்னி குயிக்கின் சமாதி லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் இருக்கிறது. இங்குள்ள கேம்பர்லி பூங்காவில் தமிழக அரசு சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.