கோவை மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்
கோவை மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : டிச 28, 2025 11:23 AM
ADDED : டிச 28, 2025 10:02 AM

கோவை: கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
அவரது அறிக்கை: கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு. மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சி.சுப்பிரமணியம் யார்?
* 1910 பிப்ரவரி 15ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள செங்குட்டை ப்பாளையம் என்ற கிராமத்தில் சி.சுப்பிரமணியம் பிறந்தார்.
* நாட்டின் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்காற்றிய சி.சுப்பிரமணியம், மத்திய நிதி அமைச்சர் ஆகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் வேளாண் துறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். மஹாராஷ்டிரா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். தமிழக சட்டமன்றத்திலும் பார்லியிலும் நீண்ட காலம் பணியாற்றியவர்.
* இவர் 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.
* பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் சி.சுப்பிரமணியம் ஆற்றிய பங்கிற்காக 1998ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

