பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை
பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை
UPDATED : அக் 30, 2025 06:57 PM
ADDED : அக் 30, 2025 05:19 PM

மும்பை: மும்பையில் ஸ்டுடியோவில் 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு, சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு குழந்தைகள் தேர்வும் இங்கு நடத்தப்பட்டது.
இந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக இன்று ( அக்.,30) மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாத்ரூம் வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து குழந்தைகளை மீட்டனர். ரோஹித் ஆர்யாவிடம் இருந்து ஏர்கன் மற்றும் சில ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நடந்தது என்ன
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோஹித் ஆர்யா, குறிப்பிட்ட அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர். ஒரு யுடியூப் சேனலையும் நடத்தி வந்தார். குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த ரோஹித் ஆர்யா, 'தன்னுடைய கோரிக்கை என்ன என்பதை கேட்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும். பணம் தனது நோக்கம் அல்ல' என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ரோஹித் ஆர்யா கொல்லப்பட்ட நிலையில், பிணைக்கைதியாக குழந்தைகளை பிடித்து வைக்க என்ன காரணம் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

