விண்வெளியில் ரகசிய பொருளை ஏவும் சீனா; அதிர்ச்சியில் கூவும் உலக நாடுகள்
விண்வெளியில் ரகசிய பொருளை ஏவும் சீனா; அதிர்ச்சியில் கூவும் உலக நாடுகள்
ADDED : நவ 09, 2026 05:23 AM

சில நாட்களுக்கு முன்பு விண்வெளியில் ரகசிய பொருளை சீனா ஏவியதாக அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. அது என்ன பொருள், சீனாவின் திட்டம் என்ன என்று தெரியாமல் உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
சீனா ஒரு விண்கலம் தயாரித்துள்ளது. சீன மொழியில் 'ஷென்லாங்', அதாவது 'தெய்வீக டிராகன்' என அழைக்கப்படும் இந்த ரோபோ விண்கலம் ஏற்கனவே ஏவப்பட்டு உள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு புவிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் சில மர்மமான பொருட்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்கப்படும் விண்கலம்
2020ல் அதன் முதல் பயணத்திலிருந்து, இந்த விண்கலம் பல நாடுகளால் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை, அதன் பேனல்களில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் மங்கலான புகைப்படத்தைத் தவிர வேறு எதையும் யாரும் பார்த்ததில்லை.
இப்போது தான் அமெரிக்கா முதன்முதலாக இந்த விண்கலத்தின் ஓரளவு தெளிவான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை முகமையின் (டிஐஏ) சமீபத்திய 'விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்' என்ற அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இந்த புகைப்படம் 2024ல் யாண்டர் என்ற அமெரிக்க உளவு நிறுவனத்தின் விண்கலத்தால் எடுக்கப்பட்டது. விண்கலத்தின் கதவுகள் திறந்திருப்பதையும், அது ஒரு துணை செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருப்பதையும் புகைப்படம் காட்டுகிறது. இருப்பினும், சீனா தனது சோதனை விண்கலம் குறித்து ரகசியம் காக்கிறது. அந்த விண்கலத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தைக் கூட வெளியிடவில்லை. ஆனால் ஷென்லாங்கை ஆராய்வதற்கும் அதன் திறன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் கிடைத்த முதல் வாய்ப்பு இந்தப் புகைப்படம்தான்.
அமெரிக்க அறிக்கை, விண்வெளியில் சீனாவின் விரிவடைந்து வரும் ஆதிக்கத்தை காட்டுகிறது. அது சோதனை விண்கலம் என்றும், அது 26 அடி (8 மீ) நீளத்திலும் 32 அடி (10 மீ) அகலத்திலும் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது. முன்னதாக, இந்த மர்மமான விண்கலத்தின் படங்கள் அதன் பேனலில் இருந்து வந்த மங்கலான பிரதிபலிப்புகளாகவே இருந்தன. இருப்பினும் ரேடார் கண்காணிப்பு, அந்த விமானம் சுற்றுப்பாதையில் பல மர்மமான பொருட்களை வெளியிடுவதைக் காட்டியுள்ளது. 2010 முதல் இந்த ரகசிய விண்கலம் ஏழு பயணங்களை மேற்கொண்டு, 2 ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் ரகசியப் பணிகளை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் காப்பி
இருப்பினும், பழைய அமெரிக்க விண்வெளி விமானத்திற்கும் அதன் புதிய சீனப் பிரதிக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க விண்கலத்தை காப்பி அடித்து சீனாவும் ரகசிய விண்கலத்தை தயாரித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
டர்காம் பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு நிபுணரான பேராசிரியர் ஜொனாதன் மெக்டொவல், இது பற்றி கூறும்போது சீன விண்வெளி விமானம் அமெரிக்க விண்கலத்தைப் போலவே உள்ளது. நடுவில் ஒரு லோடு ஏற்றும் பகுதியும், பின்புறத்தில் சூரிய மின்தகடுகளுடன் கூடிய சுழற்றி எறியக்கூடிய சர்வீஸ் பகுதியும் உள்ளன என்கிறார்.
அமெரிக்க அறிக்கை குறிப்பிடுவது போல, சீனாவில் ஷென்லாங் மற்றும் 'மேக சவாரி' என்று பொருள்படும் டெங்யுவென் பெயரிடப்பட்ட விண்வெளி விமானங்கள் உள்ளன. அதேபோல், அமெரிக்க பாதுகாப்பு உளவு முகமை, சீனா இதுவரை மூன்று விண்வெளி விமானப் பயணங்களை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒன்றுமே புரியல உலகத்துல
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான 'லியோ லேப்ஸ்' சீனாவின் 'ஷென்லாங்' விண்வெளி விமானம் புவிக்கு மிக அருகிலுள்ள சுற்றுப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சீனாவின் இந்த ரகசிய விண்வெளி விமானம் குறித்து உலக நாடுகள் அச்சப்படத் துவங்கி உள்ளன. முக்கியமாக, இவ்வளவு நாளும் ஷென்லாங் புவி தாழ் சுற்றுப்பாதையில் என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து இன்னும் பகிரங்கமாக ஊகிக்க முடியவில்லை. முந்தைய ரேடார் கண்காணிப்பு, ஷென்லாங் பூமியைச் சுற்றி அடையாளம் தெரியாத ஒன்பது பொருட்களை வெளியிடுவதைப் பதிவு செய்துள்ளது.
இவை கியூப்சாட்ஸ் எனப்படும் சிறிய, எளிய செயற்கைக்கோள்கள் என்று நம்பப்படுகிறது, ஆனால் அவை எதற்காக ஏவப்படுகின்றன என்பதும் தெளிவாக இல்லை. அமெரிக்க அறிக்கை மேலும், செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவும் மீட்டெடுக்கவும் சீன வாகனத்தில் ஒரு ரோபோ கை இருப்பதாக சந்தேகிக்கிறது. ஆனால் அது புகைப்படத்தில் தெரியவில்லை. ஒரு ரோபோ ஷட்டிலை ஏவுவதில் சீனாவின் திறனை வெளிப்படுத்தவும், சுற்றுப்பாதையில் தொழில்நுட்பத்தைச் சோதிக்கவும் ஷென்லாங் விண்வெளி விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் ராணுவ விண்வெளித் திட்டங்களின் திறன்கள் வேகமாக வளர்ந்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் இந்தக் கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன. சீன விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் பெயர் ஹாங்வோலாங். இது சுமார் 7000 கிலோ எடை, இறக்கைகள் விரிக்கப்பட்ட நிலையில் 32 அடி (10 மீ) நீளமும் 24 அடி (8 மீ) அகலமும் கொண்டது.
சீனாவின் 'வேகமாக விரிவடைந்து வரும் விண்வெளித் திட்டத்தின் திறன், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கிறது. 2016 முதல், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் விண்வெளி ஏவுகல்களின் எண்ணிக்கை 22லிருந்து 93ஆக அதிகரித்துள்ளது. சீனா மட்டும் ஆண்டுக்கு ஒன்பது மடங்கு அதிக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.
மற்ற நாடுகளுக்கு மிரட்டலா
'மற்ற நாடுகளின் விண்வெளித் திறன்களைச் சீர்குலைக்கவும், சேதப்படுத்தவும் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை சீனா உருவாக்கியுள்ளது என்றும் அமெரிக்க அறிக்கை எச்சரிக்கிறது.
'சீனா, மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட தரைவழி ஏவுகணை அமைப்புகள் உட்பட, பல வகையான விண்வெளிக்கு எதிரான ஆயுதங்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, உருவாக்கி, சோதித்து, நிலைநிறுத்தி வருகிறது' என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.
நேரடி ராணுவ நடவடிக்கைகளுக்கு விண்வெளி தடை செய்யப்பட்ட பகுதி என்ற பல ஆண்டுகளாக சர்வதேச ஒருமித்த கருத்து இருந்தபோதிலும், பல நாடுகள் இப்போது பூமியின் சுற்றுப்பாதையை ஆயுத மயமாக்க இலக்கு வைத்துள்ளன.
