கல்வான் தாக்குதல் குறித்து சல்மான் கான் நடித்த பட டீசர்: அதிர்ச்சியில் சீனா
கல்வான் தாக்குதல் குறித்து சல்மான் கான் நடித்த பட டீசர்: அதிர்ச்சியில் சீனா
ADDED : டிச 30, 2025 10:50 PM

புதுடில்லி: 2020ம் ஆண்டு கல்வான் மோதலை மையமாக வைத்து பாலிவுட் நடிகர் சல்மான கான் நடித்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பலர் உயிரிழந்து இருந்தாலும் அதனை சீனா அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்ட நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூக நிலை திரும்பி உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ' Battle Of Galwan' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.கல்வானில் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கர்னல் பிக்குமல்லா சந்தோஷ் பாபு கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.
இதற்கு சீனாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த டீசரில் உண்மையை திரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சீன அரசு ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், 2020 ல் நடந்த மோதலின் நிகழ்வுகள் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை. இந்த படம் மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. பாலிவுட் படங்கள் அதிகபட்சமாக பொழுது போக்கு சார்ந்த உணர்ச்சிபூர்வமான சித்தரிப்பையே வழங்குகின்றன. ஆனால், சினிமாவில் எந்த அளவு மிகைப்படுத்தினாலும் வரலாற்றை திருத்தி எழுதவோ சீன ராணுவத்தின் உறுதிப்பாட்டை அசைக்கவோ முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி சினிமாவை உருவாக்க தயாரிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. இந்த படத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

