கிறிஸ்துவ - முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
கிறிஸ்துவ - முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
ADDED : நவ 15, 2025 05:53 AM

சேக்ரமென்டோ: கலிபோர்னியாவில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் கவுன்சில்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில், 'ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடத்தியதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நியூயார்க் மாகாண சர்ச் கவுன்சிலின், 'மத தேசியவாத திட்டம்' அமைப்பினரும், இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலான, ஐ.ஏ.எம்.சி.,யும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இக்கருத்தரங்கில், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள் என்ற பெயரில், அமெரிக்க வாழ் ஹிந்துக்களை குறி வைத்து நியாயமற்ற முறையில் வெறுப்புணர்வுகளை முன்வைத்ததற்காக, அமெரிக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வடக்கு கலிபோர்னியா மற்றும் இந்தியாவில், ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் மற்றும் உலகளாவிய மத தேசியவாதங்கள் உடனான உறவுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், உலகெங்கிலும் அதிகரித்து வரும் மதத்தை அடிப்படையாக கொண்ட தேசியவாத அரசியல் இயக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஹிந்து தேசியவாதத்தின் தீவிர வடிவம் என்று கருதப்படும் ஹிந்துத்துவம், விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக கூறப்படும் கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தால் சமூகத்தில் எவ்வாறு பிளவு ஏற்படுகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ தேசியவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இவைதவிர, ஹிந்துத்துவ கொள்கைகள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு, கலிபோர்னியாவில் உள்ள ஹிந்து சமூகத்தினரிடையே அவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விவாத பொருள் ஹிந்துத்துவம் என்றாலும், விவாதத்துக்கான கருப்பொருளாக ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் என தலைப்பிடப்பட்டது ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
மேலும், கருத்தரங்கின் விவாத தலைப்பு ஹிந்து மதம் என்ற ஒரு மதத்தையே தவறாக சித் தரித்து, அதை ஒரு வன்முறை சித்தாந்தமாக பார்க்க துாண்டுகிறது என்றும், இது ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை துாண்டுகிறது என்றும் ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியதுடன், தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

