கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படம் புக்கிங்கில் ஹவுஸ்புல் ; ஒரு டிக்கெட் ரூ.3,300க்கு விற்பனை
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படம் புக்கிங்கில் ஹவுஸ்புல் ; ஒரு டிக்கெட் ரூ.3,300க்கு விற்பனை
ADDED : ஜூன் 11, 2026 02:42 PM

மும்பை: கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ஒடிசி' படத்தின் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரூ.3,300 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும், ஆர்வத்துடன் ரசிகர்கள் வாங்கி வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'தி ஒடிசி' ஜூலை 17ம் தேதி வெளியாகிறது. சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக முழு நீளமும் ஐமேக்ஸ் கேமராக்களாலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்தப் படம் வெளியாக இன்னும் 5 வாரங்கள் உள்ள நிலையில், ஜூன் 8ம் தேதி பிரத்யேக ஐமேக்ஸ் திரைகளுக்கான முன்பதிவுகள் துவங்கின. மும்பை மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் சில டிக்கெட்டுகள் அதிகபட்சமாக ரூ. 3,300 வரை விற்கப்பட்டன.
மும்பையின் பீனிக்ஸ் பல்லேடியம் மாலில் உள்ள பிவிஆர் ஐகானில் உள்ள விற்கப்பட்ட ரூ.3,300 விலை கொண்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோல், மும்பையின் மிகப்பெரிய திரையான வடாலா மிராஜ் சினிமாஸில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில், ரூ. 1,800க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிவிஆர் திரையரங்குகளில் மிக அதிகபட்சமாக ரூ. 2,100 முதல் ரூ. 2,400 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதலிரண்டு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்து விட்ட நிலையில், அந்த வார இறுதி ஷோக்களுக்கான டிக்கெட்டுகளும் காலியாகி வருகின்றன.
இதன்மூலம், இந்தியாவில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் 'தி ஒடிஸி' திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் பிரமாண்டமாகத் தொடங்கப் போவது உறுதியாகிவிட்டது.
