தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைதள இயக்கம்; அன்னிய தலையீடு குறித்து உளவுத்துறை விசாரணை

'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைதள இயக்கம்; அன்னிய தலையீடு குறித்து உளவுத்துறை விசாரணை

'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைதள இயக்கம்; அன்னிய தலையீடு குறித்து உளவுத்துறை விசாரணை


ADDED : மே 22, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சமூக வலைதளத்தில் மிக குறைந்த நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் பிரபலமாகி உள்ள, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற அரசியல் நைய்யாண்டி இயக்கத்தில் அன்னிய நாடுகளின் தலையீடு குறித்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், சமீபத்தில் ஒரு வழக்கை விசாரிக்கும் போது, 'வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் சிலர் கரப்பான் பூச்சிகளைப் போல உள்ளனர். அவர்களில் சிலர் ஊடகம், சமூக வலைதளம், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் என மாறி, அனைவரையும் தாக்கி பேசுகின்றனர்' என, கூறினார்.

வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் நீதிபதி ஒப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில், 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற 'மீம்' எனப்படும், நையாண்டி கருத்துக்களை படங்களுடன் வெளியிடும் பக்கம் துவங்கப்பட்டது.

இது மிக வேகமாக வளர்ந்து சில நாட்களுக்குள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.50 கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது. நாட்டில் உள்ள எந்த கட்சிக்கும் சமூக வலைதளத்தில் இவ்வளவு பின்தொடர்பவர்கள் இல்லை.

குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ந்ததால், இது குறித்து இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான, 'மெட்டா' மத்திய அரசுக்கு தகவல் தந்தது.

மெட்டாவின் இந்திய செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், 'எங்கள் தளத்தில் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு திடீரென பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், விசாரணை செய்து உடனடியாக அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம். காக்ரோச் ஜனதா கட்சி விவகாரத்திலும் இதை செய்தோம்' என்றார்.

ஐ.பி., எனப்படும் மத்திய உளவுத்துறை மற்றும் சமூக வலைதளங்கள், டிஜிட்டல் வடிவிலான தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை காக்ரோச் ஜனதா பார்ட்டி குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

அவர்கள் கூறியதாவது:

காக்ரோச் ஜனதா கட்சி என்ற பக்கம், 'ஆம் ஆத்மி - குஜராத்' என்ற பக்கமாக இருந்துள்ளது. கடந்த 21ல் காக்ரோச் ஜனதா கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பக்கத்தை உருவாக்கியவர் அபிஜித் தீப்கே. இவர் 2020 - -23 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சமூக வலைதள வியூக வகுப்பாளராக இருந்தவர். தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் வட்டார அளவிலான ஆதரவு பக்கம், திடீரென நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிரான, 'மீம்ஸ்' இயக்கமாக மாறி, சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்களை ஈர்த்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற இளைஞர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து, நகைச்சுவை, நைய்யாண்டி என்ற போர்வையில் இளைஞர்களைத் திரட்டுகின்றனர்.

அவர்களை வீதிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்த வைக்க திட்டமிட்டிருக்கலாம். இந்த அமைப்புடன் தொடர்புடைய, 'டெலிகிராம்' மற்றும் பிற சமூக வலைதள சேனல்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கணக்குகளின் நடமாட்டமும் கண்டறியப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற இயக்கங்கள் அரசு மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக பலவீனப்படுத்தி, நாட்டில் ஒரு ஒழுங்கற்ற பயத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் பரப்பி வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின் தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

காக்ரோச் ஜனதா கட்சி சமூக வலைதள பக்கத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை நேற்று 2 கோடியை கடந்தது. இது குறித்து பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்த தஜீந்தர் பகா வெளியிட்ட பதிவில், காக்ரோச் ஜனதா கட்சி பக்கத்தை பின் தொடர்பவர்களில் 50 சதவீதத்தினர் பாகிஸ்தானியர்கள் எனவும், ஒன்பது சதவீதத்தினர் மட்டுமே இந்தியர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்தை மறுத்துள்ள காக்ரோச் ஜனதா கட்சி பக்கத்தின் நிறுவனர் அபிஜித், இன்ஸ்டாகிராமில் இருந்து தகவலை பகிர்ந்துள்ளார். அதில் பக்கத்தை பின் தொடர்பவர்களில் 94 சதவீதத்தினர் இந்தியாவில் இருந்து செயல்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us