தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கருணை பணியை உரிமையாக கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

 கருணை பணியை உரிமையாக கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

 கருணை பணியை உரிமையாக கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

3


ADDED : ஆக 08, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஆக 08, 2026 06:37 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'பணியின்போது எஸ்.ஐ., கொலை செய்யப்பட்டதால் அவரது மகள் கருணைப் பணியை உரிமையாக கோர முடியாது,' என, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

துாத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் ஜெயதுர்காதேவி. இவரது தந்தை பாலு. இவர் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்த போது கொலை செய்யப்பட்டார். தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாலுவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க 2021 பிப்., 1 ல் அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

தனக்கு தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் விதிகளின்படி (கருணை அடிப்படையில்) பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என ஜெயதுர்காதேவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் சகோதரர் வங்கியில் பணிபுரிகிறார். மனுதாரர் திருமணமானவர். குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 564. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஜெயதுர்காதேவி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரவணன்: விதிகள் அடிப்படையிலேயே மனுதாரர் வேலை கோருகிறார். அப்போதைய முதல்வரின் செய்திக் குறிப்பு அடிப்படையில் வேலை கோரவில்லை என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கருணை பணி நியமனத்திற்காக பரிசீலிக்க மனுதாரர் தகுதியுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவரது தந்தை பணியில் இருந்த போது இறந்துள்ளார். எனினும் தகுதியுடைய குடும்ப உறுப்பினருக்கு பணி வழங்க கூடுதல் நிபந்தனைகள் உள்ளன.

முதல் நிபந்தனை குடும்பம் வறுமை நிலையில் இருக்க வேண்டும். மனுதாரரின் கணவர் என்ன நிலையில் உள்ளார், அவர் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார், எங்கு பணிபுரிகிறார் குறித்த விபரத்தை முன்வைக்கவில்லை.

குடும்பத்தின் எந்த உறுப்பினரும் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் நிரந்தர பணியில் இருக்கக் கூடாது என்பது மற்றொரு நிபந்தனை. குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீடு சொந்தமாக உள்ளது.

சகோதரி நிலை என்ன:

மனுதாரரின் சகோதரர் வங்கியில் பணிபுரிகிறார். மனுதாரருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். அவர் கருணை பணி பெற ஏன் தகுதியற்றவர், மனுதாரர் மட்டுமே தகுதியுடைய நபராக இருந்து, அவருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என கருதுவதற்கான காரணங்கள் குறித்த விபரத்தை அளிக்கவில்லை. குடும்பத்தை சகோதரர் கைவிட்டுவிட்டார் என்பது மனுதாரரின் கருத்து மட்டுமே.

வேலைவாய்ப்பிற்கு உதவி வழங்கும் மாநில நலவாழ்வு பிரிவை மனுதாரர் அணுகலாம் என தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொது ஊழியராக பணியாற்றிய ஒருவரின் திடீர் மரணத்தால் அக்குடும்பம் சந்திக்கும் இழப்பு, வறுமைக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதே கருணை பணி வழங்குவதன் நோக்கம்.

அக்குடும்பம் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ளும் நிலையில் இருந்தால், வறுமையால் பாதிப்பிற்குள்ளான மற்றொரு குடும்பத்திற்கு அத்தகைய வேலை வழங்கப்படலாம். வேலைவாய்ப்பை ஒரு உரிமையாக மனுதாரர் கோர முடியாது. கருணை பணிக்குரிய தகுதி வரம்பிற்குள் மனுதாரர் வரவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us