முதலீடுகளை கொண்டு வருவதில் வெளிநாடுகளுடன் போட்டி: முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை கொண்டு வருவதில் வெளிநாடுகளுடன் போட்டி: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : நவ 25, 2025 07:40 PM
ADDED : நவ 25, 2025 07:35 PM

கோவை: ''வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் போட்டி போட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருகிறோம்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை லீ மெரிடியன் ஹோட்டலில், முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, இதில், 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆதரவு வேண்டும்
இதனைத் தொடர்ந்து இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றியதாவது: எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். கடந்த லோக்சபா தேர்தலை போல் வரும் காலத்திலும் உங்கள் ஆதரவை தர வேண்டும். அதுதான் முக்கியம். உங்களுக்காக நானும் திராவிட மாடல் அரசும் தொடர்ந்து உழைப்போம் என உறுதியுடன் சொல்லிக் கொள்கிறேன்
இந்தியாவின் எடிசன் ஜிடிநாயுடு, அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற ஏராளமான திறமைசாலிகளை தந்து புதுமையான முயற்சிகளுக்கும் கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்றது கோவை மண்.
பிரிக்க முடியாது
திமுக ஆட்சியையும், தமிழக வளர்ச்சியும் பிரிக்க முடியாது. 1971ல் சிப்காட் ஆரம்பித்த காரணத்தினால், உலகமயமாக்கல் அறிமுகமான பிறகு அந்த வாய்ப்பை தமிழகம் பயன்படுத்தி கொண்டது. கணினி தான் எதிர்காலம் என பாடத்திட்டத்தில் சேர்த்தோம். இந்தியாவில் முதல் மாநிலமாக 1997 ஐடி கொள்கை கொண்டு வந்தோம். டைடல் பார்க் உருவாக்கினோம்.
கோவை கேப்பிடல் சிட்டி கிடையாது. டயர் 2 சிட்டி தான். இங்கு ஏராளமான நிறுவனங்கள் நிரம்பியுள்ளதை பார்த்து இருப்பீர்கள். இதே நிலை தமிழகம் முழுதும் இருக்க வேண்டும். தமிழகம் வளர வேண்டும்.
34 லட்சம் பேருக்கு
இதுவரையிலும் நடந்த 17 முதலீட்டாளர் மாநாட்டால், 1016 புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரத்து 271 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. 34 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.
தமிழகத்தில் 80 சதவீதம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 809 ஒப்பந்தங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளது. தமிழகத்தில் இப்போது 12,663 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வளர்ச்சியை பிடிக்காதவர்கள்
தமிழகத்தில் தொழிலுக்கு உகந்த சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழக வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் நோக்கத்தோடு தவறான செய்தி, தகவலை பரப்புகின்றனர்.
அடுத்ததாக, தமிழகத்துக்கு வர வேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக செய்திகளை உருவாக்குகின்றனர். அதனை பார்த்தால் அவர்களின் நோக்கம் புரியும். ஏன் பரப்புகின்றனர் என தெரியும். தமிழகத்துக்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கவனம்
தொழில் முதலீடு கொண்டு வருவது சாதாரணமான விஷயம் அல்ல. பலத்த போட்டிகளுக்கு இடையே, இன்னும் சொல்லப்போனால் இந்திய மாநிலங்களுக்கு மட்டும் அல்ல, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் போட்டி போட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருகிறோம்.எந்த முதலீடுகளை கொண்டு வருவோம் என கவனம் செலுத்துகிறோம். எத்தனை கோடி முதலீடு என்பதை விட, தமிழகத்துக்கு உகந்ததா, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குமா முடியுமா என சிந்தித்து கொண்டு வருகிறோம்.
நிதி நிலைக்கு ஏற்ப சிந்தித்து முறையான சலுகைகளை கொடுத்து முயற்சிகளில் ஈடுபடுகிறாம்; செயல்படுகிறோம். முதலீட்டாளர்கள் கேட்கும் சலுகைகளையும் அதனால் தமிழகத்துக்கு கிடைக்கும் பலன்களையும் ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவை எடுக்கிறோம்.
தமிழகத்தில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படாது, எந்த தலையீடுகளும் இருக்காது. தெளிவாக வேகமாக வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

