தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/யு.பி.ஐ., கட்டண விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்.,: மத்திய அரசு குற்றச்சாட்டு

யு.பி.ஐ., கட்டண விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்.,: மத்திய அரசு குற்றச்சாட்டு

யு.பி.ஐ., கட்டண விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்.,: மத்திய அரசு குற்றச்சாட்டு

4


ADDED : செப் 17, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : செப் 17, 2026 10:50 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-சிறப்பு நிருபர்-

'யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு, முதலில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பதாக காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது' என, மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

யு.பி.ஐ., மூலம் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 2,000 ரூபாய்க்கு மேல் பெறும் பணத்திற்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்திருந்தது. இந்த கட்டண முறை வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை வழக்கம் போல கட்டணம் இல்லாமல் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், இது தொடர்பாக கடந்த ஆக., 12ல் நடந்த நிதித் துறைக்கான பார்லி., நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.,க்களில் ஒருவர் கூட எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என மத்திய அரசு விமர்சித்துள்ளது. மேலும், எம்.டி.ஆர்., என்பது ஒரு வரி அல்ல; இந்த விவகாரத்தில், காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

யு.பி.ஐ., கட்டமைப்பின் நிதி நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, அடுக்குமுறை வருவாய் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அறிக்கை தயார் செய்யப்பட்டு பார்லி., நிலைக்குழு உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிதம்பரம், மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய், கிஷோரி லால் மற்றும் கோபிநாத் ஆகிய ஐந்து பேர் பங்கேற்றனர். அப்போது அந்த அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பது ஏன்? என புரியவில்லை.

தன் சொந்த கட்சி எம்.பி.,க்களே அறிக்கையை ஏற்றுக் கொண்ட நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யு.பி.ஐ., கட்டண முறை தொடர்பான விவாதத்தில் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.,க்களான கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், யு.பி.ஐ., கட்டண முறை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us