மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்
மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்
UPDATED : டிச 18, 2025 05:49 AM
ADDED : டிச 18, 2025 03:54 AM

புதுடில்லி: ''நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை டில்லி நீதிமன்றம் நிராகரித்ததை வரவேற்கிறோம். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்,'' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக, அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.
'இந்த வழக்கு தனிநபரால் அளிக்கப்பட்ட புகாரின்படி துவங்கப்பட்டதே தவிர, முறையான முதல் தகவல் அறிக்கையின்படி அல்ல. 'எனவே, பண மோசடி சட்டத்தின் கீழ் இதை விசாரிக்க முடியாது' என, நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து, டில்லியில் நேற்று, காங்., தலைவர் கார்கே கூறியதாவது: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இது அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது. இது போன்ற செயல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

