பீஹார் தேர்தலால் காங்., அதோகதி: தமிழக தலைவர்கள் கொந்தளிப்பு
பீஹார் தேர்தலால் காங்., அதோகதி: தமிழக தலைவர்கள் கொந்தளிப்பு
UPDATED : நவ 18, 2025 06:26 AM
ADDED : நவ 18, 2025 06:19 AM

- நமது நிருபர் -
பீஹார் தேர்தலில், தேசிய கட்சியான காங்., படுதோல்வியை சந்தித்திருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியின் மோசமான செயல்பாடுகளே, பீஹாரில் தோல்விக்கு முக்கிய காரணம் என, கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள் என பலரும் தேசிய தலைமைக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.
பீஹாருக்கு பிரசாரத்துக்காக சென்ற தமிழக காங்., தலைவர்கள், 'தோல்வி எதிர்பார்த்தது தான் என்றாலும், மோசமான தோல்வியை சந்தித்தது, கட்சியின் எதிர்காலத்துக்கே விடப்பட்ட சவாலாக கருதுகிறோம்.
'இனியும், கள நிலவரம் புரியாமல், காங்., தலைமை செயல்பட்டால், கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது' என, பீஹாரில் தாங்கள் சந்தித்தவற்றை விளக்கமாக காங்., தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், காங்., தோல்விக்கான முக்கிய காரணங்கள் குறித்து நிறைய விஷயங்களை பட்டியலிட்டுள்ளனர். அவற்றில், முக்கியமானவை குறித்து, தமிழக காங்கிரசார் கூறியதாவது:
பீஹாரில் பூத் முகவர்களைக் கூட முழுமையாகப் போட முடியாத நிலை காங்கிரசுக்கு உள்ளது. பல பூத்களில் காங்., சார்பில் முகவர்களே இல்லை. அந்தளவுக்கு தொண்டர்கள் இல்லாத கட்சியாக பீஹாரில் காங்கிரஸ் மாறி உள்ளது. கடந்த 1990களில் இருந்தே, பீஹாரில் காங்., முகம் என சொல்லும் அளவுக்கு எந்த தலைவரும் இல்லை. அப்படி ஒரு தலைவரை காங்., உருவாக்கவில்லை. பீஹாரில், மாநில கட்சிகளைக் காட்டிலும் மோசமான நிலைக்கு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.
கட்சி மாறி வந்தவர்கள்
இப்படி மோசமான நிலையில் கட்சி இருந்தும் கூட, பணம் வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது, சொற்ப எண்ணிக்கையில் இருந்த கட்சியினரையும் சோர்வாக்கியது. சொந்தக் கட்சியினரிடமே பணம் பெற்று, வேட்பாளர்களை நிறுத்தும் கட்சியால், நேர்மையான ஆட்சியை எப்படி தர முடியும் என, மக்கள் பேசியதை, நேரடியாகவே பார்த்தோம்.
எந்த உருப்படியான திட்டங்களும் இல்லாமல் கட்சியை வழி நடத்தும் காந்தி குடும்பத்தினர் பிடியில் இருந்து மீட்டெடுத்து புதிய தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வந்தால் மட்டுமே, காங்கிரசை காப்பாற்ற முடியும்.
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளர் ஆக்கியதால், உள்ளூரில் இருக்கும் காங்கிரசார் ஒதுங்கி கொண்டனர்; சிலர், எதிர் தரப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். காங்., வேட்பாளர்களில் 10 பேர் கட்சி மாறி வந்தவர்கள்.
பீஹாரில் பாரம்பரியமாக, முஸ்லிம் ஓட்டுகள் காங்.,குக்கு கிடைத்தன. இம்முறை அதையும் காங்., கோட்டைவிட்டது. கூட்டணிக்கு வருவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., என்ற முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி முன் வந்தார். ஆனால், அந்த கட்சியை காங்., மற்றும் ஆர்.ஜே.டி., துளி கூட மதிக்கவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில், தனியாகவே போட்டியிட்டு ஐந்து இடங்களை ஓவைசி கைப்பற்றி விட்டார்.
மேலும், முஸ்லிம் ஓட்டுகள் இம்முறை, நேர் எதிர் சித்தாந்தம் கொண்ட பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு பெருமளவில் சென்றன. அண்மை காலமாக, காங்., வைக்கும் எந்த பிரசாரமும் எடுபடவில்லை. உள்ளூர் பிரச்னைகளுக்கு காங்., தலைமை முக்கியத்துவம் அளிக்காமல், ஓட்டு திருட்டு, எஸ்.ஐ.ஆர்., அதானி, அம்பானி என பிரசாரம் செய்கிறது.
இதனால், உள்ளூர் பிரச்னைகளை பேசி, தீர்வு ஏற்படுத்த முடியாத கட்சிக்கு ஏன் ஓட்டளிக்க வேண்டும் என, காங்.,கை மக்கள் புறக்கணித்து விட்டனர். ஆனால், மாநில பிரச்னைகளை பேசி எதிர் அணியினர் வெற்றி பெற்று விட்டனர். சிறு கட்சியாக சுருங்கினாலும், காங்.,கில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை; கட்சிக்குள் காலை வாரும் நிகழ்வை கண்கூடாக பார்த்தோம்.
பீஹாரில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ., கூட்டணியினர், ஓராண்டுக்கு முன்பே தேர்தல் வேலையை துவங்கி விட்டனர். பிரதமர் மோடி முதல் லோக்கல் கட்சியினர் வரை, களத்தில் பம்பரமாக சுழன்றனர்.
ராகுலின் பிரசாரம்
ஆனால், காங்.,கின் முகமான ராகுல், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான், ஆஸ்திரேலியாவில் இருந்து பீஹார் வந்தார். அவரது பிரசாரமும் எடுபடவில்லை. காங்., தலைவர்களும், ராகுலின் பிரசாரமே போதும் என, இருந்து விட்டனர்.
இப்படி கட்சியே கலகலத்து கிடந்தாலும், கூட்டணியில் 61 தொகுதிகளை வம்படியாக காங்., கேட்டு வாங்கியது, கூட்டணி கட்சியான ஆர்.ஜே.டி.,க்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், மாநிலம் முழுதும் காங்., - ஆர்.ஜே.டி., கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை.
யார் ஆட்சி செய்தாலும், ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் ஒவ்வொரு தேர்தலிலும் உருவாகும். அந்த ஓட்டுகளை, சரியாக வியூகம் அமைத்து, தங்கள் பக்கம் எதிர்க்கட்சியினர் கொண்டு வருவர். பீஹாரில் பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளை தங்கள் பக்கம் ஈர்க்க, காங்.,கிடம் எந்த திட்டமும் இல்லை.
காங்., கட்சி எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, பீஹார் தேர்தலும், தோல்வியும் அப்பட்டமாக உணர்த்தி விட்டன. இது, மாநில தேர்தல், என வழக்கம் போல காங்., தலைமை கடந்து போகுமானால், இந்தியாவில் காங்., என்ற கட்சி இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் போய்விடும்.
எந்த உருப்படியான திட்டங்களும் இல்லாமல், கட்சியை வழி நடத்தும் காந்தி குடும்பத்தினர் பிடியில் இருந்து மீட்டெடுத்து, புதிய தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வந்தால் மட்டுமே, காங்கிரசை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

