அமித்ஷா உடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை: செங்கோட்டையன்
அமித்ஷா உடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை: செங்கோட்டையன்
ADDED : செப் 09, 2025 03:12 PM

கோவை: ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது. 'எனவே, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி துவங்க வேண்டும்; இல்லையெனில், நானே இணைப்பு பணியில் ஈடுபடுவேன்' என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், செங்கோட்டையன் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்துள்ளார். இது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காலை கோவை வந்த செங்கோட்டையன், டில்லி கிளம்பிச் சென்றார். ''மனம் சரியில்லாததால், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறேன். பா.ஜ., தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை,'' என நிருபர்களிடம் கூறினார். ஆனால் நேற்று இரவு அவர் டில்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டில்லியில் இருந்து கோவை திரும்பிய செங்கோட்டையன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நேற்றைய தினம் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். டில்லி சென்ற உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அரசியல் சூழல் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கட்சி வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஆகவே கருத்துகள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்று நடக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்ப தங்களின் விருப்பங்களை தெரிவிக்கும் நோக்கத்தில் ஒவ்வொருக்கும் இருக்கும் ஜனநாயக உரிமை அடிப்படையில் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
அமித்ஷாவை சந்திக்கும்போது ரயில்வே அமைச்சர் வந்தார். அவரிடம், ' ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்கூட்டியே செல்வதால் மாணவர்கள், வியாபாரிகள் செல்வது கடினமாக உள்ளது. அதிகாலை 3 சென்னை சென்றடைகிறது. அதனை மாற்றினால் உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அதனை குறிப்பிட்டு தாருங்கள் பரிசீலனை செய்வதாக கூறினார். மக்கள் பணி செய்வதற்கும், கட்சி வலிமை பெறுவதற்கும் உங்களின் ஒத்துழைப்பு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.