நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 22, 2025 07:23 PM

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி., ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் கே.கே.புதுாரை சேர்ந்தவர் ஏ.சந்திரசேகரன். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில், அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு பின், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை ஊதிய உயர்வை நிறுத்தி, 2014ல், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., உத்தரவு பிறப்பித்தார். இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், முறையாக தகவல்களை தெரிவித்ததாகவும், அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல், தனக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும், 2015- - 16ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் அவரின் பெயரை சேர்க்கும்படியும், கடந்த ஏப்ரல் 25ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சந்திரசேகரன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை சேர்க்கக்கோரி, உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன் இரண்டு முறை அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, இதுவரை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை. இது, நீதிமன்ற அவமதிப்பு என்பதால், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., ஜி.வெங்கடராமன் ஆகியோர், ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.இந்த இடைப்பட்ட காலத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினாலோ அல்லது மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றாலோ, இருவரும் நேரில் ஆஜராக தேவையில்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

