மிகப்பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும்; நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
மிகப்பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும்; நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ADDED : டிச 08, 2025 10:11 AM

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கும் நெட் பிளிக்ஸின் முடிவு, மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளவில் படங்களை தயாரிப்பதிலும், விநியோகத்திலும் நூற்றாண்டுக்கு மேலாக கோலோச்சி வந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது.
இதன்மூலம், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், தயாரித்த திரைப்படங்கள், வெப் சீரிஸ், டிசி காமிக்ஸ் படங்கள் மற்றும் ஹெச்பிஓ ஓடிடி தளம் ஆகியவற்றையும் நெட்பிளிக்ஸ் கையகப்படுத்தியுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொகையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு, நெட்பிளிக்ஸ் வழங்க உள்ளது.
இந்த நிலையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது; நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் முயற்சி மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெள்ளை மாளிகைக்கு சென்ற நெட் பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சராண்டோஸைப் பாராட்டிய அதிபர் டிரம்ப், 'திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பணிகளில் ஒன்றைச் செய்துள்ளார்,' என்று கூறியிருந்தார்.

