சட்டசபை நடவடிக்கைகள் குறித்து கோர்ட் கேள்வி எழுப்ப முடியாது; அதிமுக மனு தள்ளுபடி
சட்டசபை நடவடிக்கைகள் குறித்து கோர்ட் கேள்வி எழுப்ப முடியாது; அதிமுக மனு தள்ளுபடி
ADDED : செப் 23, 2026 10:40 PM

சென்னை: 'சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக, கடந்த ஜூன் 19ல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, 'மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. இதற்கு, அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த திருத்தத்தை எதிர்த்து, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களை அடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு சட்டம், 212(1) பிரிவின்படி, சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 194வது பிரிவு, சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்களுக்கு, சட்ட பாதுகாப்பு அளிக்கிறது.
சட்டசபை நடைமுறைகள் தொடர்பான அனைத்து கேள்விகள் குறித்தும் முடிவெடுக்க, சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்த கருத்தை, தீர்மானத்தில் சேர்த்தது, சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
