பிரான்ஸ் அஞ்சல் சேவையின் மீது சைபர் தாக்குதல்; ரஷ்ய ஹேக்கர்கள் நாச வேலை
பிரான்ஸ் அஞ்சல் சேவையின் மீது சைபர் தாக்குதல்; ரஷ்ய ஹேக்கர்கள் நாச வேலை
ADDED : டிச 24, 2025 04:59 PM

பாரிஸ்: சைபர் தாக்குதல்கள் காரணமாக பிரான்சில், அஞ்சல் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதுக்கு, ரஷ்ய ஹேக்கர்கள் குழு தான் காரணம் என்பது அம்பலம் ஆகி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், கிறிஸ்துமஸ் பண்டிகை பரபரப்புக்கு நடுவே, தேசிய அஞ்சல் சேவையான லா போஸ்ட் மற்றும் அதன் வங்கி பிரிவான லா பேங்க் போஸ்டல் ஆகியவற்றின் ஆன்லைன் சேவைகள் சைபர் தாக்குதல் காரணமாக முடக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பார்சல்கள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் அதிகளவில் நடைபெறும் முக்கியமான நேரத்தில் இந்த முடக்கம் நிகழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஆன்லைன் சேவை முடக்கத்தால், பார்சல்கள் அனுப்புவதிலும், அதனை பெறுவதிலும் தாமதமும், தடைகளும் ஏற்பட்டன. இந்த சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இது, இணையதளத்தின் சர்வர்களை முடக்கி, சேவைகளை பயன்படுத்த முடியாதவாறு செய்யும் ஒரு வகை தாக்குதல் என அஞ்சல் துறை உறுதி செய்துள்ளது.
சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. பார்சல் விநியோகங்களை நிறுத்திய ஒரு பெரிய சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் உளவுத்துறை நிறுவனமான DGSI, ஹேக்கிங் தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் நாச வேலைக்கான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

