எச்1பி விசா முறையில் முட்டுக்கட்டை : இந்தியர்களுக்கு மீண்டும் நெருக்கடி
எச்1பி விசா முறையில் முட்டுக்கட்டை : இந்தியர்களுக்கு மீண்டும் நெருக்கடி
ADDED : டிச 24, 2025 10:07 PM

நியூயார்க் : 'எச்1பி' விசா குலுக்கல் முறையை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதால், ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 85,000 விசாக்கள் வழங்கப்பட்டால், அதில் 70 சதவீதத்தை இந்தியர்களே பெறுகின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டொனால்டு டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகளை அவர் கொண்டு வந்துள்ளார். அந்நாட்டு குடியேற்ற கொள்கை மற்றும் விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்டிய டிரம்ப், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 89 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்யவும் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால், எச்1பி விசா பெறுவதில் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறையும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு குடியேற்ற மற்றும் வெளியுறவு சேவை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:எச்1பி விசா நடைமுறையில், 85,000 விண்ணப்பங்களை தாண்டும் போது கம்ப்யூட்டர் வாயிலாக தேர்வு செய்யும் குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குலுக்கல் முறைக்கு பதிலாக உயர் திறமை வாய்ந்த மற்றும் அதிக சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'வெயிட்டட் செலக்ஷன் முறை' நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாற்றம், அடுத்தாண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
எச்1பி விசா குலுக்கல் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. பல நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த மோசடி செய்வது தெரியவந்துள்ளது. இது, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கிறது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய திட்டம், திறமையானவர்களுக்கு மட்டுமே, அமெரிக்காவில் நுழைவதற்கான கதவை திறக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எச்1பி விசாவை அதிகளவு இந்தியர்கள் பெற்று வந்த நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விசா வாயிலாக, அமெரிக்கா செல்லும் நடுத்தர தொழில் வல்லுனர்கள், துவக்க நிலை பொறியாளர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் வாயிலாக செல்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

