பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்
ADDED : நவ 18, 2025 10:58 PM

தென்காசி: பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் ஜெயபாலன். இவர் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.
குறிப்பாக பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுவது போலவும் பேசினார்.
மோடி இன்னொரு நரகாசுரன் என்றும், அவரை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்றும் ஜெயபாலன் பகிரங்கமாக மேடையில் நின்று மைக்பிடித்து பேசினார்.
அவர் இவ்வாறு பேசியது, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோவாக பரவி வருகிறது.
நாட்டின் பிரதமரை தீர்த்துக் கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் பேசுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த பேச்சு பற்றி திமுக தலைமை இதுவரை எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயபாலன் மீது கட்சி தலைமையும் தமிழக போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

