UPDATED : மே 02, 2026 02:39 AM
ADDED : மே 01, 2026 11:26 PM

ஜெய்ப்பூர்: ராகுல், நிசங்கா அரைசதம் கைகொடுக்க, டில்லி அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில், ராஜஸ்தான் அணியை வென்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பேட்டிங் தேர்வு செய்தார். தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், நேற்று டில்லி அணிக்கு திரும்பினார்.
வைபவ் 'ஷாக்'
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் (6), 143 கி.மீ., வேகத்தில் வீசப்பட்ட 3வது பந்தில், அவரிடமே 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். மறுபக்கம் வைபவ், தான் எதிர்கொண்ட முதல் பந்தில் (ஜேமிசன்), பவுண்டரி விளாசினார். 2வது பந்தை ஜேமிசன் 'யார்க்கராக' வீச, வைபவ் (4) போல்டாகி, விரக்தியுடன் வெளியேறினார். ராஜஸ்தான் அணி 12/2 என திணறியது.
சூப்பர் ஜோடி
பின், ரியான் பராக், துருவ் ஜுரெல் இணைந்தனர். போட்டியின் 6வது ஓவரை ஜேமிசன் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் 6, 4, 6 என 16 ரன் விளாசினார் ரியான் பராக். ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 91/2 ரன் எடுத்தது. ரியான் பராக், 31 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த ஜுரெல் (42), மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன் எடுக்கப்பட்ட நிலையில், அக்சர் பந்தில் வீழ்ந்தார்.
ரியான் ஆறுதல்
மீண்டும் வந்த நடராஜன் ஓவரில், ஜடேஜா ஒரு சிக்சர், ரியான் பராக் ஒரு பவுண்டரி என அடிக்க, மொத்தம் 17 ரன் கிடைத்தன. தனது விளாசலை நிறுத்தாத ரியான் பராக், ஜேமிசன் ஓவரில் (16) 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். போட்டியின் 17வது ஓவரை வீசிய ஸ்டார்க், 2வது பந்தில் ஜடேஜாவை (20) வீழ்த்தினார். 4வது பந்தில் ரியான் பராக்கை (90 ரன், 50 பந்து) வெளியேற்றினார்.
கடைசி நேரத்தில் டொனோவன் பெரேரா, ஷுபம் துபே இணைந்தனர். குல்தீப் ஓவரில் (18) 3 சிக்சர் அடித்தார் பெரேரா. பின் ஸ்டார்க் ஓவரிலும் 4, 6 என விளாசினார் பெரேரா. ஷுபம் 6 ரன்னில் அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 225/6 ரன் குவித்தது. பெரேரா (14 பந்தில் 47) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு அரைசதம்
டில்லி அணிக்கு பதும் நிசங்கா, ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. வேகமாக ரன் சேர்த்த இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 110 ரன் சேர்த்த போது, நிசங்கா (62), ஜடேஜா சுழலில் சிக்கினார். நிதிஷ் ராணா 33 ரன் எடுத்தார். ராகுல் 75 ரன்னில் (40 பந்து) அவுட்டான போதும், டில்லி அணியின் வெற்றி எளிதானது.
பின் இணைந்த அஷுதோஷ் சர்மா, ஸ்டப்ஸ் ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. டில்லி அணி 19.1 ஓவரில் 226/3 ரன் எடுத்தது. தொடர்ச்சியான மூன்று தோல்விக்குப் பின், முதல் வெற்றி பெற்றது. அஷுதோஷ் சர்மா (25), ஸ்டப்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
