டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
ADDED : நவ 11, 2025 08:09 AM

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. செங்கோட்டை அருகே, மாலை 6:52 மணிக்கு, சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ - ரிக் ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ., 11) கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: சந்தேக நபரின் கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
அந்த காட்சிகளில் குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் சந்தேக நபர் தனியாக இருக்கிறார். புலனாய்வாளர்கள் இப்போது தர்யாகஞ்ச் நோக்கி செல்லும் பாதையைக் கண்காணித்து வருகின்றனர், அதே நேரத்தில் அருகிலுள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து வரும் காட்சிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

