மும்பை வரை நீண்ட டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; சிக்கிய 3 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை
மும்பை வரை நீண்ட டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; சிக்கிய 3 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை
ADDED : நவ 18, 2025 04:37 PM

மும்பை: நாட்டையே உலுக்கிய டில்லி கார்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இப்போது மும்பை வரை நீண்டுள்ளது. சந்தேக நபர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர்..
தலைநகர் டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? அதற்கான திட்டமிடல் எங்கே அரங்கேற்றப்பட்டது? டாக்டர்களாக இருந்து சதி செயலை நிறைவேற்றியவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை தேசிய புலனாய்வு குழுவினர் பல்வேறு கோணங்களில் தோண்டி எடுத்து வருகின்றனர்.
15 பேரை பலிவாங்கிய இந்த சம்பவத்தின் ஆரம்ப புள்ளி டில்லியில் மட்டுமல்ல, பல்வேறு இடங்களில் வியாப்பித்து இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது.
அதன் முக்கிய கட்டமாக, குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் யார், யாருடன் தொடர்பு வைத்திருந்தனர்? எங்கெல்லாம் சென்று வந்திருக்கின்றனர்? என்பதை விசாரித்து வருகின்றனர். இந் நிலையில் மும்பையில் போலீசார் மேற்கொண்ட ஒரு ரகசிய நடவடிக்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் 3 பேர் சிக்கியுள்ளனர். இந்த 3 பேரும், மெத்த படித்த, சமூகத்தில் மிக வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் டில்லி கார் குண்டுவெடிப்பு பற்றியும், அதில் ஈடுபட்டவர்களிடம் தொடர்பில் இருந்தது பற்றியும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிகிறது.
இதையடுத்து, சிக்கிய அந்த 3 பேரையும், தலைநகர் டில்லிக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்காக மிக ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக மும்பை போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 பேரும் டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியிடம் தொடர்பில் இருந்துள்ளனர், இந்த தகவல் தொடர்புக்காக அவர்கள் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை பயன்படுத்தி உள்ளதாக மும்பை போலீசார் கூறுகின்றனர்.
அங்கு 3 பேரிடம் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அதில் டில்லி குண்டுவெடிப்பில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய ரகசிய நடவடிக்கைகளிலும் மாநில போலீசார் இறங்கி உள்ளனர்.

