மூடுபனியால் டில்லியில் 100 விமானங்களின் சேவை ரத்து
மூடுபனியால் டில்லியில் 100 விமானங்களின் சேவை ரத்து
ADDED : டிச 21, 2025 05:54 PM

புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டில்லியில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 200க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக வந்தன.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வரும் 48 விமானங்களின் வருகையும், 49 விமானங்களின் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
விமான சேவைகளில் கடும் பாதிப்பு இருப்பதால் பயணிகள் புறப்படும் முன் தங்களின் பயண நேரம், சேவைகள் பற்றி தெரிந்து கொள்ளுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளதாவது;
வட இந்தியாவின் சில பகுதிகளில் கடும் மூடும்பனி காரணமாக குறிப்பிட்ட விமான நிலையங்களில் பயணங்கள் தாமதப்படக்கூடும் அல்லது மாற்றங்கள் நிகழக்கூடும். எனவே பயணிகள் தங்களின் அதிகாரப்பூர்வ பயண நேரங்களை புறப்படும் முன் மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
டில்லி விமான நிலையம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட விமான பயண அட்டவணைகளுக்கு விமான நிறுவனத்தை பயணிகள் அணுக வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை அளிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் இந்திய விமான நிலைய ஆணையம் கூறி உள்ளது.

