பகுதிநேர வேலை மறுக்கப்பட்டது ஏன்; பாராட்டு விழாவில் பராசரன் கூறிய காரணம்!
பகுதிநேர வேலை மறுக்கப்பட்டது ஏன்; பாராட்டு விழாவில் பராசரன் கூறிய காரணம்!
ADDED : அக் 11, 2025 10:18 PM

சென்னை: பகுதிநேர சட்ட விரிவுரையாளர் வேலை எனக்கு மறுக்கப்பட்டதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் கூறி உள்ளார்.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் மூத்த வக்கீல் கே. பராசரன். அவருக்கு வயது 98. வக்கீலாக 75 ஆண்டுகள், மூத்த வக்கீலாக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர். அவரின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பாராட்டு விழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ். நரசிம்மா, கே.வி. விஸ்வநாதன், ஆர். மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பராசரன் பேசியதாவது;
உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் ஒரு குடும்பத்தின் சம உறுப்பினர்கள். ஒரு மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் என்பது உயர் நீதிமன்றம், அது உச்ச நீதிமன்றத்திற்கு கீழ்ப்படிந்தது அல்ல. உச்ச நீதி மன்றம் ஒரு அரசியலமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் மட்டுமே. அவ்வளவுதான். வழக்கறிஞர் மன்றமும் நீதிபதிகளும் பறவையின் இரண்டு இறக்கைகள் போல. இவர்களில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் கூட்டாளிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வக்காலத்து வாங்கும் கூட்டாளிகள். இவர்களில் யாராவது சரியாகச் செயல்படவில்லை என்றாலும் பறவை உயரே பறக்க முடியாது, கீழே விழும்.
சட்டத் தொழிலில் எனது வெற்றிக்கு என் தந்தையும், வக்கீலுமான ஆர். கேசவ ஐயங்கார் கற்பித்த தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகள் காரணம். ஒவ்வொரு தனிநபரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது.
உயர்ந்த கண்ணியத்தை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்று எனது தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். நீங்கள் எவ்வளவுதான் கற்றறிந்த வக்கீலாக இருந்தாலும், மேடையில் அமர்ந்திருக்கும் நீதிபதி உங்களுக்குத் தெரிந்ததை விட அதிகமாக அறிந்தவர் என்ற அனுமானத்துடன் நீங்கள் எப்போதும் வாதிட வேண்டும்.
வக்கீலானவர் ஒருபோதும் ஆக்ரோஷமாக இருக்கக்கூடாது, ஆனால் நீங்கள் வேறொருவரின் சார்பாக மன்றாடுவதால் பணிவுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று தந்தை கற்றுக் கொடுத்தார்.
உங்கள் மனசாட்சிக்கு பதிலளித்தால், சட்டம் மற்றும் தர்மம் இரண்டிற்கும் பதிலளிப்பீர்கள். சட்டத்துறை தொழில் என்பது பணத்தைப் பற்றியது அல்ல. நாங்கள் நீதியை வணங்குபவர்கள். வக்கீல்கள் நியாயமான கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். என் தொழிலில் நான் வாழ்க்கை முழுதும் எந்த பதவியையும் கேட்கவில்லை.
ஒரு காலத்தில் அப்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பகுதி நேர சட்ட விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் பி.ஏ., சமஸ்கிருதத்தில் தங்க பதக்கம் பெற்றவன், சட்டம் படிக்கும் போது இந்து சட்டப்பிரிவு பாடத்தில் தங்கம் வென்றவன், பார் கவுன்சில் தேர்வுகளில் தங்கப்பதக்கம் பெற்றவன் போன்ற காரணங்களினால் நான் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. நீங்கள் தகுதியிழப்பானவர் என்று தேர்வாளர்கள் கூறினர்.
குடும்பத்தை வளர்க்கும் சுமையை எனது தோள்களில் இருந்து இறக்கிய மனைவி சரோஜாவுக்கு நன்றி. எனக்கும், மனைவிக்கும் ஓர் ஒப்பந்தம் இருந்தது. அது பணம் சம்பாதிப்பதை நீங்கள் கவனியுங்கள், அதை எப்படி செலவழிப்பது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம்.
இவ்வாறு பராசரன் பேசினார்.