அதிக கார்பன் உமிழ்வது வளர்ந்த நாடுகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அதிக கார்பன் உமிழ்வது வளர்ந்த நாடுகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : செப் 20, 2026 01:48 AM

புதுடில்லி: “நம் நாட்டின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலக சராசரியில் பாதியை விட குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகள் இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமாக கார்பன் வெளியேற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில், வளரும் நாடுகள் மீது தவறாக பழி சுமத்தப்படுகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
'சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு, டில்லியில் நேற்று தொடங்கியது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 17 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
கார்பன் வெளியேற்றத்துக்கான பொறுப்பு, பெரும்பாலும் வளரும் நாடுகள் மீது தவறாக சுமத்தப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால், இன்றும் கூட இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்ற அளவு, உலகளாவிய சராசரியில் பாதியளவிற்கும் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளின் தனி நபர் கார்பன் வெளியேற்றம், இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமாகவே உள்ளது.
தரநிலைகள் இந்த உண்மையை உலகளாவிய தளங்களில் இந்தியா வலுவாக எடுத்துரைத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய தரநிலைகளை வகுக்க, பிற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் வளர்ச்சி விரைவானது மட்டுமல்ல, நிலையானதும் கூட. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், இந்தியா அசாதாரண முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த, 'சி.ஓ.பி., - 21' உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே நிறைவேற்றிய ஒரே 'ஜி 20' நாடு இந்தியா தான்.
புதைபடிவமற்ற எரிபொருள் பயன்பாடு, சூரிய ஆற்றல் திறன், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது என உலகம் முழுதும் இந்தியாவின் செயல்பாடு பேசப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி 2 கிகாவாட்டாக இருந்தது. தற்போது, அது 160 கிகாவாட்டை கடந்துள்ளது.
மின்சக்தி தகடு பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது, பல நாடுகளின் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு 80 ஆயிரம் ரூபாயை அரசு வழங்குகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின்சக்தி உற்பத்தி திறன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது; நீர்மின்சக்தி திறனும் உயர்ந்துள்ளது. அணுசக்தி உற்பத்தியிலும் நாடு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது. அதுவே, உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில். இது துாய எரிசக்தி போக்குவரத்து துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
கடந்த 2014க்கு முன், இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டில், 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனளிக்கின்றன.
தடை விதிப்பு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வட்ட பொருளாதாரத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது-.
இந்தியாவில் இன்று தினமும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் பல நுாற்றாண்டுகளாக உலக நாடு களுக்கு இந்தியா வழிகாட்டி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
