தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: பக்தர்கள் கருத்து
தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: பக்தர்கள் கருத்து
UPDATED : டிச 25, 2025 03:16 AM
ADDED : டிச 25, 2025 03:10 AM

திருப்பரங்குன்றம்: ''தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை,'' என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள பழநி ஆண்டவர் கோயிலை சேர்ந்த பூர்வ குடி மக்கள் சார்பாக கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் இன்னும் நான்கு மாதத்திற்கு பிறகு ஓட்டு கேட்டு எங்கள் முகத்தில் எப்படி முழிப்பார்கள் என்பதை பார்க்கலாம்.
தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் போலீசார், கலெக்டரால் தீபம் ஏற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க கேட்டு, போலீசார் அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உண்ணாவிரதம் இருந்தோம். அப்படி இருந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பூர்வ குடிகளாகிய நாங்கள் மலை உச்சியில் உள்ள சிவன் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்.
எங்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் தேர்தலில் பிரசாரத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டி கண்டனத்தை தெரியப்படுத்துவோம்.
நாங்கள் கொடுக்கும் உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்கு எதிராகவே நீதிமன்றம் சென்று தீபம் ஏற்றக்கூடாது என வாதிடும் வக்கீல்களுக்கு அரசு பணம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்றார்.

