டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; நவம்பர் 10ல் முன்னோட்டம் துவக்கம்
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; நவம்பர் 10ல் முன்னோட்டம் துவக்கம்
ADDED : நவ 08, 2025 04:01 PM

புதுடில்லி: டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நவம்பர் 10ல் தொடங்குகிறது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
இந்த கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு நடத்தப்படும்; இந்த கணக்கெடுப்பில் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பு முழுவதும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. இதற்கென மொபைல் செயலிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் லேஅவுட் மேப் மற்றும் சென்சஸ் 27 ஹவுஸ் லிஸ்ட் என்ற இந்த மொபைல் செயலிகள் வழியாக பொதுமக்கள் தகவல்கள் நேரடியாக உள்ளீடு செய்யப்படும்.
முந்தைய கணக்கெடுப்புகளில், அரசு ஊழியர்கள் வீடு வீடாக வந்து படிவங்களை பூர்த்தி செய்து செல்வர். அந்தப் படிவங்களில் இருக்கும் தகவல்கள், பின் நாட்களில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஆனால் அதற்கு மாறாக, இந்த முறை நேரடியாகவே டிஜிட்டல் வழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
நவம்பர் 10-ல் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம், நவம்பர் 30 வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்படுகிறது.
முன்னோட்டம் நடத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மொபைல் செயலிகள் வழியாக தாங்களாகவே தங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்து விடலாம். அதன் பிறகு அரசு அலுவலர்கள், தகவல் சரிபார்ப்புக்காக வீடு தேடி வருவர்.
வீடுகளில் இருக்கும் வசதிகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் வகையில், 30 கேள்விகளுக்கான பதில்களை பொதுமக்கள் அளிக்க வேண்டி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

