காங்., ராகுலுக்கு எதிராக திக்விஜய் சிங் போர்க்கொடி!: கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தல்
காங்., ராகுலுக்கு எதிராக திக்விஜய் சிங் போர்க்கொடி!: கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தல்
ADDED : டிச 28, 2025 12:55 AM

புதுடில்லி: “சமூக பொருளாதாரம், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், கொஞ்சம் உட்கட்சி விவகாரத்திலும் அக்கறை காட்ட வேண்டும்,” என காங்., மூத்த தலைவரான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருப்பது டில்லி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, 'ஜனநாயகம் பற்றி பேசும் காங்., கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இல்லை என்பது தெளிவாகிறது' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.
சமீப காலங்களாக தேர்தல் அரசியலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து வருவதற்கு சரியான தலைமை இல்லாததே காரணம் என, அக்கட்சியினரே வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.
ராகுலுக்கு, பதிலாக கேரளாவின் வயநாடு எம்.பி.,யான அவரது சகோதரி பிரியங்காவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.
சலசலப்பு
இந்தச் சூழலில், காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திக் விஜய் சிங்கும், ராகுலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் திக் விஜய் சிங் கூறியதாவது:
சமூக - பொருளாதார பிரச்னைகளில் ராகுலின் செயல்பாடு அதிரடியாக இருக்கிறது. அதற்காக அவருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கலாம். அதே சமயம் கட்சி மீதும் அவர் அக்கறை காட்ட வேண்டும்.
தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் செய்தது போல, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் ராகுல் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும்.
முக்கியமாக கட்சிக்குள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இதை உங்களால் நிச்சயம் செய்ய முடியும். ஒரே பிரச்னை என்னவெனில், எங்கள் கருத்துக்கு நீங்கள் மதிப்பு அளிக்க மாட்டீர்கள்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இது குறித்து பா.ஜ-, செய்தி தொடர்பாளர் கேசவன் கூறுகையில், “காங்கிரசின் முதல் குடும்பம், அக்கட்சியை எவ்வாறு இரக்கமின்றி சர்வாதிகார முறையில் நடத்துகிறது என்பதையும், காங்கிரஸ் தலைமையின் ஜனநாயக விரோதபோக்கையும் திக்விஜய் சிங்கின் பதிவு அம்பலப்படுத்தியுள்ளது.
“இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெடிகுண்டுக்கு ராகுல் பதிலளிப்பாரா,” என, கேள்வி எழுப்பிஉள்ளார்.
உட்கட்சி பூசல்
பாஜ., செய்தி தொடர்பாளரான பிரதீப் பண்டாரி கூறும்போது, “ராகுலுக்கு எதிராக திக்விஜய் சிங் வெளிப்படையாகவே தன் ஆதங்கத்தை கூறியிருக்கிறார். ராகுல் தலைமையின் கீழ், காங்கிரஸ் அமைப்புரீதியாக உடைந்து போய்விட்டது என்பதையும் திக்விஜய் சிங் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
“இதை வைத்து பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்குள், உட்கட்சி பூசல் பெரிதாகி இருப்பது தெரிகிறது,” என்றார்.
காங்கிரசின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர், பா.ஜ.,வை தொடர்ந்து புகழ்ந்து வரும் சூழலில், மற்றொரு எம்.பி.,யான திக்விஜய் சிங்கும் முன்வைத்துள்ள விமர்சனம் காங்கிரஸ் தலைமையை எரிச்சல்அடைய வைத்துள்ளது.

