கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போட்ட இயக்குநர் கவுதமனுக்கு தண்டனை இல்லை
கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போட்ட இயக்குநர் கவுதமனுக்கு தண்டனை இல்லை
ADDED : ஜன 11, 2026 03:22 AM

சென்னை: சென்னை, கிண்டி கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய திரைப்பட இயக்குநர் கவுதமனுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதால், தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலருமான கவுதமன் தலைமையில், கடந்த 2017ல், 'நீட்' தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, பரங்கிமலை போலீசார், கவுதமன் உட்பட 25 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தில், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், 'போராட்டத்தால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு, பொது மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'கடந்த 2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை' எனக்கூறி வழக்கை ரத்து செய்ததால், கவுதமன் உள்ளிட்ட 25 பேரும் தண்டனையில் இருந்து தப்பினர்.

