உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
ADDED : அக் 20, 2025 08:36 PM

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமான இந்தியர்கள் பணி நிமித்தம் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி உள்ளனர். அவர்களும் அங்கேயே தீபாவளி கொண்டாடுகின்றனர். இதனையடுத்து தீபாவளி பண்டிகை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. உலகத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் சில மாகாணங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது அண்டை நாடான நேபாளம், இலங்கை மற்றும் பிஜி, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், நியூஜெர்ஸி மற்றும் கலிபோர்னியாவிலும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
கரீபிய தீவுகளான டிரினிடாட் மற்றும் டுபாகோ தீவுகளிலும் தீபாவளி பண்டிகை, தேசிய கொண்டாட்டம் போல் ஆடல் பாடல், பாரம்பரிய இந்திய உணவுகளுட்ன் கொண்டாடப்படுகிறது. இத்தீவிலும் அரசு தீபாவளி பண்டிகைக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ரங்கோலி கோலமிட்டு, விளக்கு ஏற்றி வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், கால்நடைகளை மக்கள் வணங்குகின்றனர்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மொாரிஷீயசிலும் நாடு முழுவதும் வெகு உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அரசு அலுவலகங்கள் முதல் கடற்கரை ரிசார்ட்கள் வரை விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதுடன், அந்நாடு முழுவதும் வாண வேடிக்கைகள் இரவை பகல் போல் வெளிச்சமாக்குவதாக அம்மக்கள் கூறுகின்றனர்.
சிறிய தீவு நாடான பிஜியிலும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. வீடுகளில் விளக்கு ஏற்றி பண்டிகையை மக்கள் மத வேற்றுமையின்றி கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டிரபல்ஹர் சதுக்கத்திலும் ஏராளமானோர் ஒன்று கூடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பிரபல பாலிவுட் பாடல்களை பாடுவதுடன், பஜனைகள் யோகா நிகழ்ச்சிகளும் உணவு அரங்குகளும் இடம்பெறுவது வாடிக்கை. இதற்கு பிரிட்டன் அரசின் ஆதரவும் உள்ளதால், இங்கு ஆண்டுதோறும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மற்றொரு நாடான சிங்கப்பூரிலும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் வெகு சிறப்பாக இருக்கும். அந்நாட்டில் லிட்டில் இந்தியா பகுதி,யில் தெருக்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இப்பண்டிகையை அந்நாட்டு அரசு தேசிய விழாவாக அங்கீகரித்துள்ளது.