அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க., அரசு: மத்திய அமைச்சர் காட்டம்
அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க., அரசு: மத்திய அமைச்சர் காட்டம்
ADDED : டிச 31, 2025 07:37 AM

மதுரை: “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, தி.மு.க., அரசு காலில் போட்டு மிதிக்கிறது,” என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, தீக்குளித்து இறந்த மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று சென்று, பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின் அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பூர்ணசந்திரன் தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
''பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு. பூர்ணசந்திரன், தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் தி.மு.க., அமைச்சரோ, அரசோ அவருக்கு மரியாதை செய்யாதது அவமரியாதையே,” என்றார்.
அடிப்படை உரிமை
முன்னதாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: பக்தர்களின் வழிபாட்டு உரிமையை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையை மறுப்பதற்கு தி.மு.க., அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நீதிபதி மீது பார்லிமென்டில் 'இம்பீச்மென்ட்' நோட்டீஸ் கொடுக்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க., அரசு காலில் போட்டு மிதிக்கிறது. பெரிய அநீதி
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், கடவுள் முருகன் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அப்படியென்றால், 'திருப்பரங்குன்றத்திற்கு பெரிய அநீதி இழைத்து விட்டேன். அதற்காக முருகனிடம் மன்னிப்பு கேட்டு மொட்டை அடித்துக் கொள்வேன்' என ஸ்டாலின் கூறுவாரா? மொட்டை கூட அடிக்க வேண்டாம். திருப்பரங்குன்றத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சாமி கும்பிட சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

