207 பள்ளிகளை மூடிவிட்டு கல்வி விழா நடத்தும் திமுக: இபிஎஸ்
207 பள்ளிகளை மூடிவிட்டு கல்வி விழா நடத்தும் திமுக: இபிஎஸ்
ADDED : செப் 26, 2025 10:04 PM

அரவக்குறிச்சி: '' கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் கொண்டாடுகிறார். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம், திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடினார்கள். அவர்கள், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் தவறான தகவல் கொடுத்து புகழ வைத்துள்ளனர்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் இபிஎஸ் பேசியதாவது: அரசு அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையோடு செயல்பட வேண்டும். மகக்ளின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. மக்களைக் காப்பதுதான் கடமை, அதைவிடுத்து மக்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் நெருக்கடி கொடுத்தால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
செந்தில்பாலாஜி எப்படிப்பட்டவர் என்பது கரூர் மக்களுக்கு நன்கு தெரியும். சிவாஜிகணேசன் மட்டும் மறையாமல் இருந்தால், இவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்பார், சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேடம் அணிவார், புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். அத்தனையும் தீய எண்ணம் கொண்டது, மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்து செயல்படக்கூடியவர். அவர் 5 கட்சிக்கு போய்விட்டு வந்தவர், அடுத்து எங்கு போவார் என்று தெரியவில்லை. தேர்தல் முடியும்வரை திமுகவில் இருப்பார், தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், எந்தக் கட்சிக்கு போவார் என்று பிறகு சொல்கிறேன்.
கடந்த தேர்தலின்போது பெண்களுக்கு கொலுசு கொடுத்தார், அதுவும் போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர் செந்தில்பாலாஜி. ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றியவர். இந்த மாவட்டத்தில் காவிரியாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது. செந்தில் பாலாஜி ஆதரவில் தான் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கிறார்கள். மணல் கடத்தப்படுவது அதிகாரிகளுக்குத் தெரியும். எனவே, தவறுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள், தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏதோ பேசிவிட்டுப் போகிறார் என்று நினைத்துவிடாதீர்கள்,
செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் அளவுக்கு மீறி அதிகாரம் கொடுத்திருப்பதால் ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீதிருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருபோதும் நீங்கள் தப்பிக்க முடியாது. அந்தளவுக்கு வலிமையான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தேர்தல் வரை வெளியில் இருப்பீர்களா என்பதே சந்தேகமாக உள்ளது. வழக்கு விரைவாக முடிந்தால் இருக்குமிடம் கரூர் அல்ல, பாதுகாப்பான இடத்துக்குச் செல்வீர்கள்.
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் கொண்டாடுகிறார். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம், திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடினார்கள். இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்று தெலுங்கானா முதல்வரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அவருக்கு இங்கு நடப்பது தெரியாது. தவறான தகவல் கொடுத்து வரவழைத்து திமுக அரசை புகழை வைத்துள்ளனர், இது தவறான செயல். இவ்வாறு அவர் பேசினார்.