அரசியல் வியாபாரத்துக்காக தமிழ்ப்பற்றை பயன்படுத்தும் திமுக: அண்ணாமலை
அரசியல் வியாபாரத்துக்காக தமிழ்ப்பற்றை பயன்படுத்தும் திமுக: அண்ணாமலை
ADDED : நவ 25, 2025 04:09 PM

சென்னை: உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், தலைமையில் நடைபெற்ற கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில், இந்த செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுகின்றன என்று திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண்.
உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக. அதனால்தான், தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட உரைக்கவில்லை.
இனியாவது, வெறும் உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி, முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

