நன்கொடை முறைகேடு: அயோத்தியை விட்டு ராமர் கோவில் நிர்வாகிகள் வெளியேற தடை!
நன்கொடை முறைகேடு: அயோத்தியை விட்டு ராமர் கோவில் நிர்வாகிகள் வெளியேற தடை!
ADDED : ஜூன் 22, 2026 01:07 AM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கான நன்கொடையில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் அயோத்தியை விட்டு வெளியேறுவதற்கு சிறப்பு புலனாய்வு குழு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
கோவிலுக்காக பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடுகள் நடந்ததாக சமீபத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. குறிப்பாக, நன்கொடை நிதியில் இருந்து 24 கோடி ரூபாய் வரை மாயமானதாக குற்றஞ் சாட்டப்பட்டது.
உத்தரவு
இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோவில் அறக்கட்டளையே முன்வந்து அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் கடந்த 13ம் தேதி மூன்று அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது. இக் குழு, கடந்த சில நாட்களாக அயோத்தியில் முகாமிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதான அர்ச்சகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
அப்போது, 'பிராண பிரதிஷ்டை' விழாவின் போது, கோவில் அடித்தளத்தில் வைப்பதற்காக நகை வியாபாரிகள் வழங்கிய 60 கிலோ வெள்ளிக் கட்டிகள் குறித்த தகவல்கள், கோவில் கணக்கு பதிவேட்டில் இடம் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று லக்னோவுக்கு புறப்பட்டனர். அதற்கு முன், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் யாரும் அயோத்தியை விட்டு வெளியேறக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
ராமர் கோவிலுக்காக பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய வைரம், தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து ஆவணப்படுத்துவதில் முறைகேடுகள் நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணையின் போது சில நிர்வாகிகள், ஊழியர்கள் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாகவும், அதிருப்தி அளிக்கும் வகையிலும் இருந்தது.
சந்தேகம்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை மகா கும்பமேளா விழா நடந்தபோது கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய போது தான், இந்த முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, இந்த அதிரடி தடை உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் திரட்டப்பட்ட விபரங்கள், தினசரி புலனாய்வு அறிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் அதிகாரிகள் பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளனர். தவிர, இந்த அறிக்கைகள் அவ்வப்போது முதல்வரின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
தற்போது அதிகாரிகள் லக்னோ திரும்பி இருக்கும் சூழலில், விசாரணையில் கிடைத்த விபரங்கள் அனைத்தும் இறுதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வெறும் நிதி முறைகேடு புகார்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, பல்வேறு காலக்கட்டங்களில் கோவில் அறக்கட்டளை வாங்கிய நிலங்கள் குறித்தும் நீள்கிறது. சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு நிலங்கள் வாங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடக்கிறது.
அதே போல், கோவில் கட்டுமானப் பொருட்கள் கொள்முதல், அதற்கான நிதி பரிவர்த்தனை களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
