குளறுபடிகளுடன் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
குளறுபடிகளுடன் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : டிச 19, 2025 03:31 AM

சென்னை: பல்வேறு குளறுபடிகளுடன் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் இன்று வெளியிடுகிறது.
தமிழகத்தில், 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள், நவம்பர் 4ம் தேதி துவங்கின. இதற்காக, தமிழகத்தில் உள்ள, 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 68,470 பேர் வாயிலாக, வீடு வீடாக படிவம் வினியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் இப்பணிகள், 100 சதவீதம் முடிந்துள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று மாநிலம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஆனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை. இதனால், இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், பல்வேறு குளறுபடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணிக்கு, தி.மு.க., தலைமை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அந்த கட்சியினர்தான் கணக்கெடுப்பு பணியில் முழுமையாக பங்கேற்றனர். அ.தி.மு.க., தரப்பில், பெரிதாக எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.
கணக்கெடுப்பு படிவங்கள், பல இடங்களில் உரிய வாக்காளர்களிடம் வழங்கப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளிடம் வழங்கலாம் என, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது.
இதனால், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் இருந்து படிவங்களை மொத்தமாக வாங்கி, அவற்றை பூர்த்தி செய்து, அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகள் ஒப்படைத்து உள்ளனர்.தற்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து, 50 லட்சம் பேர் வரை நீக்கப்படுவர் என, தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், முறைப்படி கணக்கெடுப்பு பணிகள் நடந்திருந்தால், மேலும் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பர். தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்களும், இந்த குளறுபடிகளை கண்டறிந்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், பல்வேறு குளறுபடிகளுடன், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடும் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணியில், தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டும்.

