தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது
தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது
UPDATED : செப் 06, 2025 04:59 PM
ADDED : செப் 06, 2025 04:52 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் உற்பத்தி கும்பலை சேர்ந்த ஐடி நிபுணர் உட்பட 12 பேர் மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவின் சேரமல்லி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை என்ற போர்வையில் ரகசியமாக போதை மருந்துகள் உற்பத்தி செய்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, மஹாராஷ்டிராவின் மீரா-பயந்தர், வசாய்-விரார் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஒரு மாதமாக கண்காணித்து, 60க்கும் மேற்பட் இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெரிய போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் 12 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கைதான 12 பேரில் ஐடி நிபுணர் ஒருவரும் சிக்கினார். அவர் தனது ரசாயன அறிவை தவறாக பயன்படுத்தினார். மேலும் இதில் மீரா சாலையில் கடந்த மாதம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பிடிபட்ட வங்கதேச பெண் ஒருவரும் தொடர்புள்ளவராக அறியப்பட்ட பாத்திமா முராத் ஷேக் என்கிற மொல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.
மேலும் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 35,000 லிட்டர் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் முகவர்கள் மூலம் மும்பைக்கு வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலில் வெளி நாட்டவரின் ஈடுபாட்டின் காரணமாக இந்த வழக்கு சர்வதேச அளவிலும் விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.