UPDATED : மார் 24, 2026 09:14 AM
ADDED : மார் 24, 2026 09:02 AM

நமது நிருபர்
ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் 2ம் பாகம், 'துரந்தர் தி ரிவெஞ்ச்' என்கிற பெயரில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) உலகமெங்கும் வெளியானது.
இந்த படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது 'படம் எப்படி இருக்கிறது?' என நிருபர்கள் கேட்டதற்கு 'படம் சூப்பராக இருக்கிறது' என சைகை செய்துவிட்டு ரஜினி சென்றார்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
முதல் பாகமான 'துரந்தர்' பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலக விஷயங்களை மேலோட்டமாக பேசியது; அதே இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' பல விஷயங்களை நிகழ்கால சம்பவங்களுடன் ஒன்றிணைத்து நேரிடையாக பலவற்றை சிந்திக்க வைக்கிறது. இதுதான் படம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சாதனை
இறுதிப் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், ஆதித்யா தார் இயக்கிய இந்த படம் நேற்று (மார்ச் 23) ரூ. 65 கோடி நிகர வசூலை பதிவு செய்துள்ளது என சாக்னில்க் என்ற வர்த்தக இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இப்படத்தின் ஐந்து நாள் நிகர வசூல் தற்போது ரூ. 519.12 கோடியாக உள்ளது. அதே சமயம், உலகளவில் இது ஏற்கனவே ரூ. 800 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டிவிட்டது.
துரந்தர் 2 படத்திற்கு 5 நாட்களுக்கு கிடைத்த வசூல்
* வியாழக்கிழமை (மார்ச் 19): ரூ 102.55 கோடி
* வெள்ளிக்கிழமை (மார்ச் 20): ரூ 80.72 கோடி
* சனிக்கிழமை (மார்ச் 21): ரூ. 113 கோடி
* ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22): ரூ. 114.85 கோடி
* திங்கட்கிழமை (மார்ச் 23): ரூ 65 கோடி
* மொத்தம்: ரூ 519.12 கோடி
இதே வேகத்தில் சென்றால், 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் 1,000 கோடி ரூபாய் வசூலித்துவிடும். இப்படம் ஏற்கனவே இந்தி சினிமாவுக்கு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
படத்தில் பாகிஸ்தானின் குற்றவியல்-பயங்கரவாத வலையமைப்புகளில் ஊடுருவும் ஒரு இந்திய உளவாளியாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன், மற்றும் கவுரவ் கேரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குநர் ஆதித்ய தர், ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ள அஸ்வத்தாமா திரைப்படத்திலும் ரன்வீர் சிங்கையே நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
