ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி; பா.ஜ., நிர்வாகியிடம் ஈ.டி., விசாரணை
ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி; பா.ஜ., நிர்வாகியிடம் ஈ.டி., விசாரணை
ADDED : செப் 10, 2025 04:23 AM

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்நாடக பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிரிடம், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிர் என்பவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'காங்., - எம்.பி., ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமை வைத்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட ராகுலுக்கு தகுதி இல்லை' என, அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை, ஆக., 30ல் விசாரித்த உயர் நீதிமன்றம், விக்னேஷ் சிஷிருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, தன் புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதாகவும், டில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் பலமுறை ஆஜராகி ஆதாரங்களை வழங்கியதாகவும், உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செப்., 9ல் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ், பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
பெமா சட்டத்தின் கீழ், தனிநபர் அல்லது நிறுவனங்களின் அன்னிய செலாவணி சட்ட மீறல் புகார்களை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இதன்படி, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், விக்னேஷ் சிஷிர் நேற்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். அப்போது, ராகுலின் குடியுரிமை தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத் துறையினரிடம் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.