அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க... நாளை தேர்தல்: காலையில் ஓட்டுப்பதிவு; மாலையில் முடிவு
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க... நாளை தேர்தல்: காலையில் ஓட்டுப்பதிவு; மாலையில் முடிவு
ADDED : செப் 08, 2025 12:24 AM

புதுடில்லி: நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது நாளை தெரியும். காலையில் ஓட்டெடுப்பு நடந்ததும் மாலையில் முடிவு வெளியாகிறது. நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022, ஆகஸ்டில் ஜகதீப் தன்கர் தேர்வானார். பதவி காலம் முடிவதற்கு இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய ஜூலை 21ம் தேதி, தன்கர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில், ராஜினாமா செய்வதற்கான எந்தவொரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், அன்றிரவு 9:25 மணி அளவில், அவர் எடுத்த முடிவு தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உடல்நலம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறினாலும், இந்த வி வகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
ராஜினாமா கடிதம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை அவர் ஏற்றுக் கொண்டதால், பா.ஜ., அவரை அவமானப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதன் காரணமாகவே அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டதாகவும் பேச்சு அடிபட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தலை நடத்தும் பணிகள் தீவிரமடைந்தன.
அதன்படி, செப்., 9ல் தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில் தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அதன்படி நாளை பார்லி.,யில் உள்ள வசுதா என்ற எப் - 101 அறையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 5:00 மணி வரை நடக்கும்.
இந்த தேர்தலில் பார்லி.,யின் இரு சபைகளை சேர்ந்த எம்.பி.,க்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். அதே போல் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்களும் ஓட்டளிக்க முடியும்.
துணை ஜனாதிபதி தேர்தலை ராஜ்யசபா பொதுச் செயலர் பி.சி.மோடி நடத்துகிறார். தேர்தல் முடிந்ததும், மாலை 6:00 மணிக்கு உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி எப்படி ஓட்டளிக்க வேண்டும் என எம்.பி.,க்களுக்கு பயிற்சி தர தே.ஜ., மற்றும் இண்டி கூட்டணிகள் முடிவு செய்துள்ளன.
அதன்படி தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களு க்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
இந்நிகழ்ச்சியின் போது பிற கட்சி எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வந்ததற்காக நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பாரா ட்டு தெரிவிக் கப்பட்டது.
முதல் நாள் பயிற்சி வகுப்பில், '2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'எம்.பி.,க்கள் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி?' என்பது குறித்து விளக்கப்பட்டது .
'இண்டி' கூட்டணி இரண்டாம் நாளான இன்று, துணை ஜனாதிபதி தேர்தலில் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்ற பயிற்சி தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களுக்கு வழங்கப்படுகிறது.
அதே போல், காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களுக்கு இன்று மதியம் ஓட்டளிப் பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
அதன்பின் இரவு 7:30 மணிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சார்பில் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களுக்கு விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.