ADDED : செப் 05, 2025 06:45 AM

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு, வரும் நவம்பரில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவ.,22ல் நிறைவடைகிறது. இதையொட்டி, முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது .
இது குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: பீஹார் சட்டசபை தேர்தல் நவம்பரில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தசரா பண்டிகை முடிந்த பின் வெளியாகும். நவ., 15 முதல் 20க்குள் ஓட்டுகள் எண்ணப்படும். நவம்பர் 22க்குள் முழு தேர்தல் நடவடிக்கையும் முடிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.