கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் கெடு
கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் கெடு
ADDED : ஜூலை 31, 2026 08:32 PM

சென்னை: 'தர்மபுரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் உள்ள கோவில்களின் நிலங்கள், சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், புலிக்கரை கிராமங்களில், கோடலம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், பெருமாள்சாமி கோவில், திருமலைத்தேவர் கோவில், எல்லம்மன், கரக சுவாமி கோவில் உள்ளிட்டவை, ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் சரிவர பராமரிக்கப்படாமல், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அந்த நிலங்களில், சட்டவிரோத கட்டுமானங்கள், வாடகை வசூல் என நடக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறை தரப்பில், 'மனுதாரர் அளித்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'கோவில் சொத்துக்களை மீட்பது தொடர்பாக, மனுதாரர் அளித்த புகார் மனுக்களை பரிசீலித்து, 12 வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறநிலையத்துறை உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
