டில்லியில் அமலாக்கத்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைர நகைகள் பறிமுதல்
டில்லியில் அமலாக்கத்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைர நகைகள் பறிமுதல்
ADDED : டிச 31, 2025 06:10 PM

புதுடில்லி: பணமோசடி வழக்கு ஒன்றில் டில்லியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 5.12 கோடி ரூபாய் ரொக்கம், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜெம் டியூன்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கூறிக் கொண்ட இந்தர்ஜித் சிங் யாதவ் என்பவன் மீது கிரிமினல் வழக்குகள்நிலுவையில் உள்ளன.
இதனிடையே கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையே கடன் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளான். அதன் மூலம் சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்தல், கடன் வாங்கிய தனி நபர்களை மிரட்டுதல், ஆயுதங்களை கொண்டு மிரட்டுதல் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபி மற்றும் ஹரியானா மாநில போலீசார் 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கும் அடக்கம்.இதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நேற்று முதல் இந்தர்ஜித் சிங் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் அவனது கூட்டாளியான அமன் குமார் என்பவனுக்கு சொந்தமான சர்வ்பிரியா விஹார் பகுதியில் உள்ள இடங்களில் நடந்த சோதனையில் 5.12 கோடி ரூபாய், பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 8.80 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட தங்கம் மற்றும் வைர நகைகள் , செக்குகள், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

