மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
ADDED : நவ 20, 2025 07:48 AM

போடி: தேனி மாவட்டம், தேவாரத்தில் விவசாய இலவச மின் இணைப்பு வழங்க முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரன் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் லட்சுமணனை 38, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்த மணி, 2022ல் விவசாய இலவச மின் இணைப்பு பெற தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்க அனுமதி பெற்றார். சில நாட்களுக்கு முன் இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மணி இறந்ததார்.
அவரது மகன் முன்னாள் ராணுவவீரர் ராமச்சந்திரன் 40. அதே தோட்டத்திற்கு இலவச மின் இணைப்புக்கு பெற விண்ணப்பம் செய்தார். நான்கு நாட்களுக்கு முன்பு இணைப்பு வழங்குவதற்கு அனுமதி பெற்றார். இதற்கான டெபாசிட் ரூ.9520 செலுத்தினார்.
இந்நிலையில் பெரியகுளம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த, தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் லட்சுமணன் 38. மின் இணைப்பு வழங்க ராமச்சந்திரனிடம் மூன்று நாட்களுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் தேனி இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா நேற்று காலை 10:00 மணிக்கு ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ராமச்சந்திரனிடம் வழங்கி தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.
ராமச்சந்திரனிடம் இருந்து லஞ்சம் ரூ. 20 ஆயிரத்தை லட்சுமணன் வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லட்சுமணனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

