பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
UPDATED : டிச 28, 2025 10:48 PM
ADDED : டிச 28, 2025 07:26 PM

செங்கல்பட்டு: '' திமுக ஆட்சிக்கு இனிமேல் வரப்போவது கிடையாது. ஆட்சியை விட்டு போகும் போதாவது, மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக இந்தாண்டு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
அதிமுக லட்சியம்
செங்கல்பட்டு மாவட்டம், தையலூரில் பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ் பேசியதாவது: தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கத்தான் எம்ஜிஆர் கட்சி துவக்கினார். அதுவே அதிமுக லட்சியம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
அதிகரிக்கப்படும்
மத்திய அரசு, அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அதிமுக அளித்த கோரிக்கைப்படி 100 நாள் வேலைநாட்களை மத்திய அரசு 125 ஆக அதிகரித்துள்ளது. திமுக , தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, 100 நாட்கள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரிக்கப்படவில்லை. முறையாக சம்பளம் வழங்கவில்லை. தொடர்ந்து வேலை வழங்கவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பணி நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளம் அதிகரிக்கப்படும். தடையில்லாமல் பணி வழங்கப்படும். அதிமுக அரசு தான் மக்களை காக்கும் அரசு.
மக்கள் வாழ்த்து
அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தோம். அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது, ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். திமுக இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சியை விட்டு போகும் போதாவது மக்கள் வாழ்த்தட்டும்.
கடனாளி
அதிமுக ஆட்சியில் கோவிட் காலத்தில் அரசுக்கு வருமானம் இல்லாத போதும் விலைவாசி உயரவில்லை. மின்கட்டணம், வீட்டு வரி, தொழில் வரியை உயர்த்தவில்லை. இன்று வருமானம் அதிரிததுள்ளது. ஜிஎஸ்டி, பத்திரப்பதிவு, கலால் வரி உயர்ந்து வருமானம் அதிகரித்த போதும் கடன் வாங்குகின்றனர். நான் உட்பட நம்மை கடன்காரர்களாக ஆக்கியது தான் ஸ்டாலினின் சாதனை. கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி கடனாளி ஆக்கியது தான் ஸ்டாலினின் சாதனை. இந்த அரசு தேவையா? எந்த திட்டமும் இல்லை. புது மாவட்டம் இல்லை. மருத்துவ கல்லூரி கொண்டு வரவில்லை. அறிவியல், சட்டக்கல்லூரி எதுவும் கொண்டு வரப்படவில்லை. எனவே, கடன் வாங்கிய பணம் எல்லாம் எங்கே போனது என மக்கள் கேட்கின்றனர்.
ஊழல் அரசு
டாஸ்மாக் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினர். இதன் மூலம் 22 ஆயிரம் கோடி மேலிடத்தக்கு சென்றது.உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இரண்டு முறை அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஊழல் நிறைந்த அரசு திமுக அரசு.
பச்சைப்பொய்
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. தற்போது தேர்தல் வரப்போவதால், கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இன்னும் வரவில்லை. அது பச்சைப்பொய். இளைஞர்கள், மக்களின் செல்வாக்கை திமுக அரசு இழந்துவிட்டது. இதனால் லேப்டாப் வழங்குவதாக கூறியுள்ளது. ஏமாற்றி ஓட்டு வாங்க இதனை அறிவித்துள்ளனர் இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
வெறுப்புடன் இருக்கும் மக்கள்
பெருங்குடி, எம்ஜிஆர் பிரதான சாலை திறந்தவெளித் திடலில் இபிஎஸ் பேசியதாவது: திமுக 200 இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் பேசுகிறார். உண்மையில்அதிமுக கூட்டணியே 210 இடங்களில் வெல்லும். நான்கே முக்கால் ஆண்டு காலம் திமுக அரசு மக்களிடம் மிகுந்த வெறுப்புக்கு ஆளாகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு டிஜிபியை கூட நியமிக்காத அரசு. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லியும், யுபிஎஸ்சி மூலம் 3 பேர் தேர்வு செய்து அனுப்பியும் இதுவரை நியமிக்கவில்லை, அதற்கு காரணம் இவர்களுக்கு ஜால்ரா போடும் டிஜிபி கிடைக்கவில்லை. திறமையான டிஜிபி வந்தால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
பொறுப்பு டிஜிபி விடுமுறையில் சென்றால், அதற்கும் பொறுப்பு டிஜிபி நியமித்த பொறுப்பில்லாத முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி அலங்கோல ஆட்சியைப் பார்க்க முடியவில்லை. முறையாக நிரந்தர டிஜிபி நியமித்தால் தான் மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இவர்களுக்கு வேண்டப்பட்ட டிஜிபி நியமிக்க வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.
இவர்கள் கொண்டுவந்த திட்டங்களால் வேலை கிடைக்கவில்லை, அதிமுக ஆட்சி மூலமாகத்தான் தொழிற்சாலைகள் வந்தது. பொருளாதாரம் முன்னிலைக்கு வந்தது. பிரதமர் மோடி அவர்கள் மேட் இன் இந்தியா திட்டம் கொண்டுவந்தார். மெட்ரோ ரயில் திட்டம். இந்தியாவிலேயே ஒரே திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி எங்கும் கொடுக்கவில்லை சென்னைக்கு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டுவந்தோம். சோழிங்கநல்லூர் தொகுதியிலும் மெட்ரோ திட்டம் வருகிறது, அப்போது மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

