42 எம்எல்ஏக்களுடன் இபிஎஸ்... தனித்துவிடப்பட்ட சிவிஎஸ்!
42 எம்எல்ஏக்களுடன் இபிஎஸ்... தனித்துவிடப்பட்ட சிவிஎஸ்!
ADDED : மே 27, 2026 05:26 PM

சென்னை: 42 எம்எல்ஏக்கள் ஆதரவு இபிஎஸ்சிடம் இருக்க, அதிருப்தி எம்எல்ஏவான சிவி சண்முகம் தனித்து விடப்பட்டு உள்ளார். அவரின் அடுத்த முடிவு என்னவாக இருக்க போகிறது என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுகவில் கருத்து முரண்பாட்டால் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் என பிரிந்து இருந்தனர். சட்டசபையில் இரு கோஷ்டிகளாக அவர்கள் செயல்பட்டனர். கோஷ்டி சண்டை ஒருபக்கம் இருக்க, தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதால் எஸ்வி வேலுமணி, சிவி சண்முகம் அணி ஏமாற்றம் அடைந்தது.
கட்சித்தாவல் தடை சட்டம் பாயலாம் என்ற கருத்துகள் பலமாக முன்வைக்கப்பட எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஒவ்வொன்றாக ராஜினாமா செய்ய ஆரம்பித்தனர். மொத்தம் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட, இரு கோஷ்டி அணிகளும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்த பேச்சு வார்த்தையில் சமாதானம் உண்டாக, இரு அணிகளும் சட்டசபை சபாநாயகரை சந்தித்து நடவடிக்கை கோரி அளிக்கப்பட்ட கடிதங்களை திரும்ப பெறுவதாக கடிதம் தந்தனர்.
இந் நிலையில் கோஷ்டிகள் ஒன்றானாலும் சிவி சண்முகம் மட்டுமே இன்னமும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இபிஎஸ்சை அவர் மட்டுமே சந்திக்கவில்லை. கடும் அதிருப்தியில் இருக்கும் அவரை, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 10 அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு சிறிதுநேரம் நீடித்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து வெளியே வந்தார் சிவி சண்முகம். நிருபர்களின் கேள்விகளுக்கு ஆவேசமாக பேசிய அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது இபிஎஸ் பிடிவாதம் நல்லதல்ல. என்னோடு பயணிப்பவர்கள் பயணிக்கலாம் இல்லை என்றால் அவரவர் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பேசிவிட்டு வெளியே வந்தார். மேலும் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 42 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ள நிலையில் சண்முகம் தனித்துவிடப்பட்டு உள்ளார்.
