எப்ஸ்டீன் ஆவணங்கள் மறைப்பா? அமெரிக்க நீதித்துறை மறு ஆய்வு
எப்ஸ்டீன் ஆவணங்கள் மறைப்பா? அமெரிக்க நீதித்துறை மறு ஆய்வு
UPDATED : பிப் 27, 2026 03:31 AM
ADDED : பிப் 27, 2026 02:47 AM

வாஷிங்டன்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனின் கோப்புகளில் இருந்து சில ஆவணங்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பெரும் பணக்காரராகவும், தொழிலதிபருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
இவரும், இவரது தோழி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவரும், நுாற்றுக்கணக்கான சிறுமியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்குப் பதிவானது.
கடந்த 2008ம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் மற்றொரு பாலியல் வழக்கில் 2019ல் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்த சிறையில் துாக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
அவரது நண்பரான மேக்ஸ்வெல்லுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, கடந்த சில ஆண்டுகளாக எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான 30 லட்சம் பக்கம் கொண்ட ஆவணங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இதில், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2019ல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பின், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தாமாக முன்வந்து, 1980ல் தான் சிறுமியாக இருந்தபோது, டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறினார்.
இது தொடர்பாக எப்.பி.ஐ., நடத்திய நான்கு நேர்காணலில், ஒரே ஒரு நேர்காணலின் சுருக்கம் மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், மற்றவை விடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, நீதித்துறை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சில தனி நபர்களும், ஊடகங்களும் கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் வழக்கின் ஆவணங்களில் சில விடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ள அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை தற்போது மறு ஆய்வு செய்து வருகிறது' என தெரிவித்துள்ளது.

